நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள்... டெல்லியில் சிறப்புப் பிரதிநிதி நாராயணா 'டாக்ஸிக்' பிஸி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய பயணிகளை மீட்க மத்திய அரசு இயந்திரம் தீவிரமாக இயங்கி வரும் நிலையில், டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி கே. வெங்கட நாராயணா, தனது தயாரிப்பில் வெளியாகி உள்ள டாக்ஸிக் திரைப்பட புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பது அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் உருவான பேரிடர்

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 103 சுற்றுலா பயணிகள் அங்கே வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். ரசுவா மாவட்டத்தில் போதே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு ஆங்காங்கே சிக்கியுள்ளனர்.

Nepal flood

இதில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் அடங்குவர். இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்டோர் திமுரே பகுதியில் உள்ள ஆயுதக் காவல் படை முகாமிற்குப் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டாலும், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களின் நிலை குறித்து உறவினர்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள்

இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த விஜய், தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நேபாள அரசு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்துடன் நேரடியாக ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்த, டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர் ஆசிஷ் குமார் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை உடனடியாக காத்மாண்டுவிற்கு அனுப்பி வைத்தார்.

மேலும், மத்திய அமைச்சகங்களுடனான ஒருங்கிணைப்பு, விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் டெல்லி கட்டுப்பாட்டு அறையை நிர்வகிக்க அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஏ. ராஜ்மோகன், கே. தென்னரசு, ஆர். வினோத் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவும் டெல்லிக்கு விரைந்து களமிறங்கியது.

சர்ச்சையில் சிக்கிய வெங்கட நாராயணா

மத்திய அரசு மற்றும் பிற மாநில/சர்வதேச விவகாரங்களில் தமிழக அரசின் சார்பில் டெல்லியில் இருந்து ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவே கேவிஎன் குழுமத்தின் தலைவர் கே. வெங்கட நாராயணா டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

கேபினட் அந்தஸ்து கொண்ட இந்தப் பதவியில் இருக்கும் அவர், இதுபோன்ற இக்கட்டான சூழலில் டெல்லியில் முகாமிட்டு மத்திய அரசுடன் பேசி மீட்புப் பணிகளை முன்னின்று ஒருங்கிணைத்திருக்க வேண்டும்.

ஆனால், தமிழக மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆபத்தில் சிக்கித் தவிக்கும் சூழலிலும், அவர் டெல்லி தமிழ்நாடு இல்லம் பக்கம் வராமல், தனது தயாரிப்பு நிறுவனத்தின் பிரம்மாண்ட திரைப்படமான டாக்ஸிக் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் நேற்று வரை முழு மூச்சாக ஈடுபட்டு வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

எழும் கேள்விகளும் விமர்சனங்களும்

டெல்லியில் அரசின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி ஒருவர் இருக்கும்போதே, நிலைமையைச் சமாளிக்க 4 அமைச்சர்களும் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் நேரடியாகக் களமிறங்க வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்புகின்றனர்.

அரசின் முக்கியப் பொறுப்பில் இருந்துகொண்டு, பேரிடர் காலத்தில் வர்த்தக ரீதியான சினிமா விளம்பரங்களில் கவனம் செலுத்துவது பொறுப்பற்ற செயல் என்ற விமர்சனங்களும் வலுத்து வருகின்றன. நேற்று முதல்நாள் கூட அவர் பட ப்ரோமோஷனில் பிஸியாகவே இருந்தார்.

தற்போது தமிழ்நாடு இல்லத்திலும், புலம்பெயர் தமிழர் நல வாரியத்திலும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இக்கட்டான இந்த நேரத்தில், மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றவர் சினிமா விளம்பரங்களில் கவனம் செலுத்துவது பொதுமக்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+