மரம் வளர்த்தால் இலவச மின்சாரம்.. தமிழக அரசும் பின்பற்றலாம்.. ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மரம் வளர்த்தால் இலவச மின்சாரம் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிராமப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் வீட்டின் அருகே வளர்க்கப்படும் ஒரு மரத்துக்கு தலா 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறுகையில், பூச்செடிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. மரம் வளர்ந்து பெரியதாகி, நிழல் தரும் வகையிலான மரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவித்தார்.

ராமதாஸ் வரவேற்பு
இதன்மூலம் பொதுமக்கள் அதிகளவிலான மரங்களை வளர்க்க ஆர்வம் காட்டுவர் என்றும், மரம் வளர்ப்பு ஒரு இயக்கமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, தமிழ்நாட்டிலும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பசுமைப்போர்வை விரிவாக்க திட்டம்
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்திருக்கிறார். சுற்றுச்சூழலை காக்க பசுமைப் போர்வையை விரிவாக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது.

புவி வெப்பமயமாதல்
புவி வெப்பமயமாதலின் தீய விளைவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்க மரங்களை வளர்க்க வேண்டியது மிகவும் அவசியம். அதனால் தான் பிறந்தநாள், திருமண நாளில் மரக்கன்று நடும் பாட்டாளிகளுக்கு நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகிறேன்.
Recommended Video

தமிழ்நாடு பின்பற்றலாம்
ஒரு மரத்திற்கு 5 யூனிட் மின்சாரம் என்பது மிகவும் குறைவான வெகுமதியாக இருக்கலாம். ஆனால், சுற்றுச்சூழலைக் காக்க மரக்கன்று நட வேண்டும் என்ற உணர்வை இது ஏற்படுத்தும். இன்றைய சூழலில், உலகையும், உலக மக்களையும் காக்க இந்த உணர்வு தான் தலையாயத் தேவையாகும்.
மரம் நட்டால் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தலாம். இதற்கான செலவு தமிழக வனத்துறை மூலம் மரம் நட்டு பராமரிப்பதை விட பல மடங்கு குறைவாகவே இருக்கும். அதேநேரத்தில் கான்க்ரீட் பாலைவனங்களான நகர்ப்புறங்கள் பசுமை பூமியாக மாறும். ஜார்கண்ட் அரசுக்கு பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications