2 தொகுதி இடைத்தேர்தல்.. ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் தலைமையில் தவெக வியூகம்.. விஜய் பிளான் என்ன?
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக வெல்வதற்கு புதிய வியூகம் வகுத்துள்ளது. தாராபுரம் தொகுதிக்கு பொறுப்பாளராக செங்கோட்டையன் தலைமையில் 5 அமைச்சர்களும், மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளராக ஆதவ் அர்ஜுனா தலைமையில் 5 அமைச்சர்களும் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் இடைத்தேர்தல் வந்திருக்கிறது. இன்று முதல் 2 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது.

இந்த சூழலில் தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டம் இன்று மாலை நடக்கவுள்ளது. அதில் தவெக கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட இருக்கிறது. இதனால் தவெக கூடுதல் வலிமையுடன் இடைத்தேர்தலில் களமிறங்கும் என்று பார்க்கப்படுகிறது. திமுக மற்றும் அதிமுகவும் இடைத்தேர்தலில் களமிறங்குவதால், மீண்டும் மும்முனைப் போட்டியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக தரப்பில் மரகதம் குமரவேல் மற்றும் திலகபாமா ஆகியோர் தான் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்குவார்கள். இதனால் தவெக தரப்பில் பிரத்யேக வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. அதாவது மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
அதேபோல் தாராபுரம் தொகுதிக்கான பொறுப்பாளராக அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 5 அமைச்சர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். அதேபோல் முதல்வர் விஜய்யும் இந்த 2 தொகுதிகளிலும் ரோடு ஷோ மேற்கொண்டு பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று தெரிய வந்துள்ளது. இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.
ஆனால் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இம்முறை தவெகவை அட்டாக் செய்தே அரசியல் செய்வார்கள் என்பதால், அதனை எதிர்கொள்ள தவெக என்ன மாதிரியான வியூகத்தை வகுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் திமுகவை அட்டாக் செய்தே வாக்கு சேகரித்தாலும், 2 தொகுதிகளிலும் அதிமுக வலிமையாக இருந்துள்ளது. அதிமுகவின் வாக்குகளை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தொடர்பாக விஜய் பேச வேண்டிய சூழலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
