“நீட் எதிர்ப்பு போராட்டத்துக்கு தவெக முழு ஆதரவு” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி!
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு எங்களின் முழு ஆதரவு எப்போதும் உண்டு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மாணவர்களின் சிரமங்களை நாங்கள் அறிவோம். அனிதாவை இழந்திருக்கிறோம். அரசியல் லாபத்திற்காக அல்லாமல் நீட்டை உறுதியாக எதிர்க்கிறோம் என்று தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் மாணவர் போராட்டத்துக்கு எங்களின் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கு ஒட்டுமொத்த தமிழகமும், எங்கள் முதல்வரும் துணை நிற்கிறோம். இன்றைக்குத்தான் டெல்லியில் இருந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட குரல் ஒலிக்கிறது. ஆனால், சகோதரி அனிதாவில் இருந்து எண்ணற்ற சகோதர, சகோதரிகளை தமிழகம் இழந்திருக்கிறது.
நீட் விவகாரத்தில் டெல்லியின் குரலுக்கும் தமிழகத்தின் குரலுக்கும் வித்தியாசம் உண்டு. தமிழக முதல்வர், தமிழக அரசு, தவெக, தமிழக மக்கள் என எல்லோரும் ஒருமித்த குரலில் நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என்பதுதான். அதில் அரசியல் ரீதியாகவும் சரி, தனியாகவும் சரி, நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
நீட் தேர்வு இல்லாமலேயே திறன்மிக்க மருத்துவர்களை தமிழகம் உருவாக்கி உள்ளது. சமூக நீதியின் அடிப்படையில் அதைச் செய்தோம். நீட் எதிர்ப்பு நிலைப்பாடு வெறும் அரசியல் காரணங்களுக்கானது அல்ல. எளிய பின்புலம் கொண்ட மாணவர்களால் நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கான கட்டணத்தை செலுத்த முடியாது.
ஆட்சியில் உள்ள பாஜக அரசு, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதை போல நாடாளுமன்றத்தில் இந்த நீட் தேர்வு வாபஸ் பெறப்படும். அது உறுதியாக நடைபெறும். அதற்கு தமிழகத்தின் குரல் முக்கிய குரலாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 20 ஆம் தேதி சிஜேபி கட்சியினர் சார்பில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களை கலைக்க டெல்லி போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள், மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய இயக்குநர் பா. ரஞ்சித் "நீங்கள் நீட் எதிர்ப்பாளர் தானே? ஏன் போராட்டத்தை ஒடுக்குகிறீர்கள்? என தவெக அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், பாடகர் தெருக்குரல் அறிவு இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, "இந்த போராட்டம் தேவையில்லாதது. நீ ஏன் தம்பி இங்க வந்த?" என ஆதவ் அர்ஜுனா கேட்டதாக கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications
