கூட்டணியில் இருந்தே விஜய்க்கு எதிர்ப்பு..முடக்கிய போலீஸ்! கோபத்துடன் கேள்விகளை அடுக்கிய ஆளூர் ஷநவாஸ்
சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழகத்தின் வாகன பரப்புரைக்கு காவல் துறை தடை விதித்துள்ளது பெரும் விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், திராவிடர் கழகம் நடத்த இருந்த நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்திற்கு தடைவிதித்து, பெரியார் திடலில் காவல்துறையை குவித்துள்ளது தவெக அரசு. இது கடும் கண்டனத்திற்கு உரியது எனவும், நீட் விலக்கும், நீட்எதிர்ப்பும் தமிழ்நாட்டின் கொள்கை. அது தவெகவின் கொள்கையா இல்லையா? என விசிக முன்னாள் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் வெடித்திருக்கும் நிலையில் தமிழகத்திலும் பரபரப்பு குறையாமல் நீட் எதிர்ப்பு முழக்கம் அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராகவும், உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுக்க வாகன பரப்புரை செய்யப்படும் என திராவிடர் கழகம் அறிவித்தது.

அந்த பிரச்சார வாகனம் தமிழகம் முழுவதும் உலா வர இருக்கும் நிலையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் அனுமதி பெற்று கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் திருச்சியில் திராவிடர் கழகத்தின் வாகன பரப்புரைக்கு திடீரென காவல்துறை தடை விதித்து இருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் திராவிடர் கழகத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இதற்கிடையே நீதிமன்றத்தை அணுகி பிரச்சார பயணத்தை தொடர திராவிட கழக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், நீட் விலக்கும், நீட்எதிர்ப்பும் தமிழ்நாட்டின் கொள்கை. அது தவெகவின் கொள்கையா இல்லையா? என விசிக முன்னாள் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திராவிடர் கழகம் நடத்த இருந்த நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்திற்கு தடைவிதித்து, பெரியார் திடலில் காவல்துறையை குவித்துள்ளது தவெக அரசு.
இது கடும் கண்டனத்திற்கு உரியது. தி.க.வின் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் என்பது ஏதோ இப்போது மட்டும் திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போதும், திமுக ஆட்சியின் போதும் பலமுறை இப் பரப்புரை நடைபெற்றுள்ளது. ஆசிரியர் கி.வீரமணி அவர்களே தமிழ்நாடு முழுவதும் பயணித்து பரப்புரை செய்துள்ளார். அப்படி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றுள்ளேன்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கும் திமுகவுக்கும் நீட் எதிர்ப்பு எப்படி கொள்கை முடிவோ, அப்படித் தான் இப்போது ஆட்சியில் உள்ள தவெகவுக்கும் நீட் எதிர்ப்பு என்பது கொள்கை முடிவு என்று சொன்னார்கள். அந்தக் கொள்கையை வலியுறுத்தித் தான் தி.க பரப்புரை செய்கிறது. அந்தப் பரப்புரையை அன்று எடப்பாடி பழனிசாமி அவர்களும் முக ஸ்டாலின் அவர்களும் அனுமதித்து இருக்கும் போது, இன்று முதல்வர் விஜய் மட்டும் தடுப்பது ஏன்? நீட் விலக்கும், நீட்எதிர்ப்பும் தமிழ்நாட்டின் கொள்கை. அது தவெகவின் கொள்கையா இல்லையா?" என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
