தப்பிய அமைச்சர் கீர்த்தனா.. மறந்த சான்று கைக்கு வந்ததால் எம்எல்ஏவாக பதவியேற்பு.. பதவியேற்காத 7 பேர்
சென்னை: வெற்றி சான்றிதழ் மறந்ததால் தவெகவின் இளம்பெண் அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாக முதலில் பதவியேற்கவில்லை. அதன்பிறகு உதவியாளர் சான்று கொண்டு வந்ததை தொடர்ந்து அவர் எம்எல்ஏவாக பதவியேற்றார். அதேவேளையில் அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கேசி கருப்பண்ணனும் வெற்றி சான்றிதழை மாற்றி எடுத்து வந்ததால் இன்று பதவியேற்கவில்லை. இவர் மட்டுமின்றி சிவி சண்முகம் உள்பட மொத்தம் 7 பேர் எம்எல்ஏக்களாக இன்று பதவியேற்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. மெஜாரிட்டி இல்லாவிட்டாலும் திமுக கூட்டணி கட்சிகளின் தயவில் தவெக ஆட்சி அமைத்துள்ளது. தவெக தலைவர் விஜய் நேற்று முதல்வராக பதவியேற்றார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாகினர். இதில் கீர்த்தனா என்பவரும் ஒருவர்.
இதையடுத்து தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தவெக எம்எல்ஏ கருப்பையா தேர்வு செய்யப்பட்டார். இவர் தலைமையில் இன்று 17வது தமிழக சட்டமன்றத்தின் முதல் அமர்வு தொடங்கி உள்ளது. இன்றைய தினம் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்எல்ஏவாக சட்டசபையில் பதவியேற்று வருகின்றனர்.
முதலில் முதல்வர் விஜய் பெரம்பூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டார். திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றாலும் கூட அவர் பெரம்பூர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிழை சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கி எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டார். அதன்பிறகு ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களின் சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கி எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டனர்.
அமைச்சர்கள் வரிசையில் கடைசியாக கீர்த்தனா அழைக்கப்பட்டார். சட்டசபை செயலாளர் சீனிவாசன் அவரது பெயரை கூறி அழைத்தார். அவரது பெயரை கூறியதும் கீர்த்தனா எம்எல்ஏவாக பதவியேற்க சென்றார். அப்போது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை சட்டபை செயலாளர் சீனிவாசன் கேட்டார். அதற்கு அவர் சான்றிதழ் கொண்டுவரவில்லை என்றார். இதையடுத்து அவர் பதவியேற்க அனுமதிக்கப்படவில்லை.
இதனால் அவர் எம்எல்ஏவாக பதவியேற்காமல் சபையின் மையப்பகுதியில் இருந்து தனது இருக்கைக்கு நடந்து சென்றார்.ஆனால் அவர் பதவியேற்கவில்லை. அதன்பிறகு உதவியாளர் சான்று கொண்டு வந்ததை தொடர்ந்து அவர் எம்எல்ஏவாக பதவியேற்றார்.
கீர்த்தனாவுக்கு வயது 29. இவர் தான் விஜய் தலைமையிலான அமைச்சரைவில் வயது குறைந்த அமைச்சராக தற்போது உள்ளார். கீர்த்தனா விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தொகுதிில் கீர்த்தனா மொத்தம் 68,709 ஓட்டுகள் வாங்கி வாகை சூடினார். இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் 57,039 ஓட்டுகள் வாங்கி 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 51,078 வாக்குகள் வாங்கி 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இளம் அமைச்சராக வலம் வர தொடங்கி உள்ள கீர்த்தனா முதல் நாள் சட்டசபை கூட்டத்தொடரிலேயே தனது வெற்றி சான்றிதழை மறந்துவிட்டு வந்ததை நெட்டிசன்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். முதல் நாளே இப்படியா? என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதேபோல், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன் எம்எல்ஏவாக இன்று பதவியேற்கவில்லை. இவர் தனது வெற்றி சான்றிதழை மாற்றி எடுத்து வந்தார். இதனால் அவரும் எம்எல்ஏவாக இன்று பதவியேற்கவில்லை. இவர் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார்.
இவர் ஈரோடு மாவட்டம் பவானி சட்டசபை தொகுதியில் 2001 , 2016, 2021ல் வெற்றி பெற்றார். தற்போது 4வது முறையாக அவர் வெற்றி பெற்றார். 2016ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றினார்.
இந்த தேர்தலில் கேசி கருப்பண்ணன் பவானி தொகுதியில் மொத்தம் 75,577 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய தவெக வேட்பாளர் பாலகிருஷ்ணன் 68,181 வாக்குகள் வாங்கி 7,396 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரசேகர் 54,087 வாக்குகளுடன் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இவர் உள்பட மொத்தம் 7 பேர் இன்று எம்எல்ஏவாக பதவியேற்கவில்லை. இதில் 4 பேர் தவெகவை சேர்ந்தவர்கள். 3 பேர் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களின் விவரம் வருமாறு:
சேந்தமங்கலம் எம்எல்ஏ - சந்திரசேகர் - தவெக
வேளச்சேரி எம்எல்ஏ - குமார் - தவெக
பல்லாவரம் எம்எல்ஏ - காமாட்சி - தவெக
சோழிங்கநல்லூர் எம்எல்ஏ - சரவணன் - தவெக
மயிலம் எம்எல்ஏ - சிவி சண்முகம் - அதிமுக(சபைக்கு வந்து பாதியில் சென்றார்)
பவானி எம்எல்ஏ - கருப்பண்ணன் - அதிமுக
ஏற்காடு எம்எல்ஏ - உஷாராணி - அதிமுக என 7 பேர் எம்எல்ஏவாக இன்று பதவியேற்கவில்லை.
மேலும் எம்எல்ஏவாக பதவியேற்க 15 நாட்கள் வரை காலஅவகாசம் உண்டு. இதனால் அவர்கள் கையில் வெற்றி சான்றிதழ் கிடைத்தவுடன் இன்று அல்லது நாளை எம்எல்ஏக்களாக பதவியேற்று கொள்வார்.












Click it and Unblock the Notifications