அமைச்சர் ஆவதற்கான எல்லா தகுதிகளும் உதயநிதிக்கு உள்ளன..சொல்கிறார் கே.எஸ்.அழகிரி
சென்னை: உதயநிதி ஸ்டாலின் தாராளமாக அமைச்சராக வரலாம். கட்சியின் தலைவர் மற்றும் கட்சியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர் தாராளமாக அமைச்சராக வரலாம் என்றும் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். அமைச்சரவாதற்காக முழு தகுதியும் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது 45வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தனது தந்தையும், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது உதயநிதிக்கு சால்வை அணிவித்து, முத்தம் கொடுத்து அவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

உதயநிதி பிறந்தநாள்
கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்துக்கு சென்று கலைஞர் திருவுருவப்டத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒரு மாதம் கொண்டாட திமுக இளைஞர் அணியினர் திட்டமிட்டுள்ளனர். இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் மாபெரும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

தங்க மோதிரம்
மேலும் ஆதரவற்ற நிலையங்களில் காலை, மதியம் உணவு வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டன. மேலும் இல்லந்தோறும் சென்று உறுப்பினர் சேர்த்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அது மட்டுமல்லாமல் நேற்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை திமுகவினர் வழங்கினர். இதே போல மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திமுக இளைஞரணி செயலாளர்
திமுக இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதுனுடன் அவரது பிறந்தநாளும் வரவே இளைஞரணியின் இந்த ஆண்டு வெகு உற்சாகமாகவே பிறந்தநாளை கொண்டாடினர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுவடைந்து வருகிறது.

அமைச்சராவது எப்போது
ஒன்றரை வருடங்களாகவே மூத்த அமைச்சர்கள் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். நீங்கள் எப்போது அமைச்சராகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த உதயநிதி ஒன்றரை வருடமாக சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.. நான் எப்போது அமைச்சராக இருப்பேன் என்பதை முதல்வர் தான் முடிவு செய்வார் எனக் கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

கே.எஸ். அழகிரி பேட்டி
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று சொந்த கட்சியினர் வற்புறுத்தி வரும் நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரசும் இதை ஆதரித்துள்ளது. இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். உதயநிதி ஸ்டாலின் தாராளமாக அமைச்சராக வரலாம். கட்சியின் தலைவர் மற்றும் கட்சியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர் தாராளமாக அமைச்சராக வரலாம் என்று கூறினார்.

முழு தகுதியும் உள்ளது
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி. கட்சியின் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளார். அமைச்சர் ஆவதற்கான முழுத்தகுதியும் அவருக்கு இருக்கிறது. ஆனால் அமைச்சர் ஆவதற்கு அவர் விருப்பப்பட வேண்டும். கட்சியினர் விரும்புகிறார்கள். இனி அவர் விரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று சொந்த கட்சியினர் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது கூட்டணி கட்சித்தலைவரும் வற்புறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications