7 மணி நேரம்.. போலீசார் வாகனத்திலேயே அலைக்கழிக்கப்படும் உதயநிதி ஸ்டாலின்.. என்ன திட்டம்?
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறை வாகனத்திலேயே வைக்கப்பட்டு சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக அலைக்கழிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. சென்னையில் 11 மணியளவில் கைது செய்யப்பட்ட சூழலில், இன்னும் திருச்சிக்கு கொண்டு செல்லப்படவில்லை. இதனிடையே மா.சுப்பிரமணியன் போலீசார் உணவு மற்றும் இயற்கை உபாதையை கழிக்க கூட அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
நாளை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி நிர்வாகி ஒருவர் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை அவரின் வீட்டிற்கே சென்று போலீசார் கைது செய்தனர்.

காலை 11 மணியளவில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த போலீசார், அங்கிருந்து தஞ்சாவூர் அழைத்து செல்ல புறப்பட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்துவிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் முதலில் கைது செய்யக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு போட்ட பிறகும் கூட, காவல்துறை அவரைக் கைது செய்தது. அதேபோல் சொந்த வாகனத்திலும் உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் காவல்துறை வாகனத்திலேயே உதயநிதி ஸ்டாலின் தஞ்சை அழைத்து செல்லப்படுகிறார்.
2 மணியளவில் விழுப்புரம் அருகே ஒலப்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் உணவு சாப்பிட்டார். தொடர்ந்து 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை போலீசார் வாகனம் கடந்து சென்றது. திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்ல காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்கும் அதிகமாக உதயநிதி ஸ்டாலின் அலைக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது.
வெறும் விசாரணை என்றால், சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதேபோல் உதயநிதி ஸ்டாலினுக்கு உணவு சாப்பிடவும், இயற்கை உபாதை கழிக்கவும் போலீசார் அனுமதி மறுத்திருப்பதாக மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் உதயநிதி ஸ்டாலினை வேண்டுமென்றே போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications
