வடபழனி மசூதிக்குள் ரகளை.. மனநலம் பாதித்தவர் என போலீஸ் சொன்னாலும்? ஜவாஹிருல்லா எழுப்பிய 3 சந்தேகங்கள்
சென்னை: சென்னை வடபழனி மசூதிக்குள் புகுந்து பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்ட நபரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அவர் மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் கூறும் நிலையில், இந்தச் சம்பவத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்லக் கூடாது என்கிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.
சென்னை வடபழனி, கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ளது பிரபலமான மசூதி. இந்த பள்ளிவாசலுக்கு 2 நாட்களுக்கு முன்பு, அதிகாலை வழக்கம்போல் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நபர் ஒருவர், மசூதியின் பிரதான நுழைவாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளார்.

வடபழனி பள்ளிவாசல்
அங்கிருந்த புனித குர்ஆன், மேசை, நாற்காலிகள், வைஃபை உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், மசூதியின் ஜன்னல் கண்ணாடிகளையும் அவர் அடித்து நொறுக்கியுள்ளார். இதைக் கண்ட அங்கு தொழுகைக்காக வந்தவர்கள் உடனடியாக வடபழனி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த நபரைப் பிடிக்க முயன்றபோது, அவர் போலீசாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, அந்த நபர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.
கண்ணாடிக் கதவுகளை உடைத்து..
அப்போது, மசூதியின் கண்ணாடிக் கதவுகளை ஆவேசமாக உடைத்ததில் அந்த நபரின் கைகளில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஆனாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர் தொடர்ந்து ஆவேசமாக நடந்துகொண்டார். அவரைப் பார்த்து தொழுகைக்காக வந்த இஸ்லாமியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையே, அவரைச் சமாளித்து போலீஸ் ஜீப்பில் ஏற்றுவதற்குள் போலீசார் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். ரத்தம் கொட்டிக்கொண்டிருந்த நிலையிலும், அந்த நபர் திடீரென பாடல்களை பாடி டான்ஸ் ஆட தொடங்கினாராம். தனது ஊர் அரந்தாங்கி என்று கூறிய அவர், "டிவிகே தெரியுமா? தளபதி வெற்றி கழகம்" என்று முழக்கமிட்டதுடன், இளையராஜாவின் பாடல்களையும் காதல் பாடல்களையும் பாடினார். ஜாஸ்மின் என்பவரைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் சொன்னாராம்.
காயத்திலிருந்து ரத்தம் கொட்டியதால் அவர் அடிக்கடி துப்பிக்கொண்டிருந்தார். அருகில் இருப்பவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதாகக் கூறி, துப்ப வேண்டாம் என்று போலீசார் சொன்னபோது, அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இளையராஜா பாட்டு
போலீசார் அவரை மசூதியிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர் தப்பியோட முயன்றார். இதனால் கேட் மூடப்பட்ட நிலையில், காம்பவுண்ட் சுவரில் ஏறி உட்கார்ந்து கொண்டு, மறுபடியும் பாடல்களைப் பாடினார். ஒருவழியாக அவரை சுற்றிவளைத்த போலீசார், காயமடைந்த கையில் கட்டுப் போட்டனர். அப்போதும் அவர் போலீசாரை எட்டி உதைத்து தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரைக் கட்டுப்படுத்தி கே.கே. நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இஸ்லாமியர்கள் கோபம் - கோரிக்கை
இந்நிலையில், மசூதிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய சம்பவத்தைக் கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் மசூதி முன்பு திரண்டனர். சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபடத் திரண்ட இஸ்லாமியர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர்..
காவல்துறை விளக்கம்
இதையடுத்து காவல்துறையும் இதுகுறித்து விளக்கம் ஒன்றை தந்திருந்தது. மசூதிக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்திய நபர் மதுபோதையில் இருந்ததாகவும், அவர் கடந்த 5 ஆண்டுகளாக மனநலப் பிரச்சனைகளுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை, மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஆனாலும் இஸ்லாமிய அமைப்புகள் ஆவேசத்தில் உள்ளனர்.. சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜவாஹிருல்லா சொல்வது இதுதான்
மனித நேய மக்கள் கட்சி தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான ஜவாஹிருல்லாவும் இதே கோரிக்கையைதான் விடுத்துள்ளார்..
"சம்பந்தப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற காரணத்தைக் கூறி காவல்துறை வழக்கை முடித்துவிடுவது ஏற்புடையதல்ல... அந்த நபர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் உள்ள பள்ளிவாசலிலும் ஏற்கெனவே தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சென்னையில் நடைபெற்றுள்ள தாக்குதலைத் தனிப்பட்ட ஒரு நபரின் செயலாக மட்டும் கருதாமல், அதன் பின்னணி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் விரிவாக விசாரிக்க வேண்டியது அவசியமாகும்.
நேற்று நண்பகல் தொழுகைக்காக நான் சம்பந்தப்பட்ட பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தேன். அந்த பள்ளிவாசல் சாலையோரத்தில் அமைந்திருக்கவில்லை.
சிசிடிவியை நொறுக்கியது ஏன்
பள்ளிவாசலின் நுழைவாயிலிலிருந்து உள்ளே செல்ல நீண்ட பாதை உள்ளது. அத்தகைய சூழலில், பள்ளிவாசலுக்குள் நுழைந்து கண்காணிப்பு கேமராவின் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (DVR) கேபிள்களைத் துண்டித்துவிட்டு தாக்குதல் நடத்தும் ஒருவரின் செயலை, எந்தவிதமான விரிவான விசாரணையுமின்றி மனநலம் பாதிக்கப்பட்டவரின் செயலாகக் கருதுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
இது திட்டமிட்ட தாக்குதலா, இதன் பின்னணியில் வேறு நபர்கள் அல்லது அமைப்புகளுக்குத் தொடர்பு உள்ளதா, ஏற்கெனவே நடைபெற்றதாக கூறப்படும் மீமிசல் பள்ளிவாசல் தாக்குதலுக்கும் சென்னைச் சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பன உள்ளிட்ட அனைத்துக் கோணங்களிலும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
எனவே,சட்டப்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனை முழுமையாக விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும். இந்தச் சம்பவத்தை எளிதாகக் கடந்து செல்லாமல், பாரபட்சமற்ற மற்றும் விரிவான விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றெல்லாம் கேட்டுக் கொண்டுள்ளார்.
போதையில் இருந்ததாக சொல்லப்படும் நபர், எப்படி மசூதியில் போட்டிருந்த 3 பூட்டுகளை உடைத்து செல்ல முடியும்? எதற்காக சிசிடிவியை துண்டித்தார்? என்ற பலவிதமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மூத்த தலைவர் ஜவாஹிருல்லாவின் கோரிக்கையும், வடபழனி மசூதி விவகாரத்தில் வலுப்பெற்றுள்ளது...!!


Click it and Unblock the Notifications
