• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாட காத்திருந்த போது கரிசல் குயில் பறந்ததே...கி.ரா. மறைவுக்கு வைகோ இரங்கல்

Google Oneindia Tamil News

சென்னை: நூற்றாண்டு பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாட, தமிழ் இலக்கிய உலகம் ஆர்வத்துடன் காத்திருந்த வேளையில் கரிசல் குயில் பறந்து விட்டது. என்று கரிசல் எழுத்தாளர் கி. ரா. மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

கி.ரா. மறைவுக்கு வைகோ வெளியிட்ட இரங்கல்: செந்தமிழை, செழுந்தமிழாய் செழிக்கச் செய்யும் கரிசல் காட்டு மண்ணில், இடைசெவலில் மலர்ந்த, ஒப்புவமை சொல்ல முடியாத புதுமையாளர், புரட்சியாளர் கி. இராஜநாராயணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்- மெழுகுவர்த்தி ஏற்றி புகழ் வணக்கம் செலுத்திய வைகோ முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்- மெழுகுவர்த்தி ஏற்றி புகழ் வணக்கம் செலுத்திய வைகோ

கோபல்ல கிராமம், கரிசல் காட்டுக் கடுதாசி, கோபல்லபுரத்து மக்கள் என, தமிழில் அதுவரை இல்லாத புதிய எழுத்து நடையை அறிமுகம் செய்து, வரலாற்றுச் செய்திகளை, சொல் புதிதாய், சுவை புதிதாய் எல்லோரும் படிக்கின்ற எளிய நடையில், கரிசல் மண்ணின் மக்களுடைய பேச்சு வழக்கில் நமக்குத் தந்த கி.இரா. அவர்கள் இலக்கியத் துறையில் பேராட்சி புரிந்தார். கரிசல் வட்டார வழக்குச் சொல் அகராதி ஆக்கித் தந்தார்.

எழுத்தாளர்களின் செவிலித் தாய்

எழுத்தாளர்களின் செவிலித் தாய்

உலகெங்கும் வாழும் இளம் இலக்கியவாதிகள், நாட்டுப்புறக் கலை ஆர்வம் கொண்டவர்கள் அத்தனைப் பேருக்கும் ஊக்கம் அளித்து ஆதரித்து வளர்த்து வந்தார். எழுத்தாளர்களுக்கு ஒரு செவிலித்தாயாகத் திகழ்ந்த அன்புப் பாசறை அவரது புதுவை இல்லம் ஆகும். சிந்தனையாளர்களை ஊக்கப்படுத்தி, ஆற்றுப்படுத்தி வாழ்ந்த கி.இரா போன்ற ஒரு மாமனிதரை, எங்கு தேடினாலும் கிடைக்காது. இன்று, எண்ணற்ற இளைஞர்கள், அவரது எழுத்து நடையைப் பின்பற்றி எழுதுகின்றனர். திரைப்படங்களை இயக்குகின்றனர்.

வரமாக இருந்தது

வரமாக இருந்தது

புதுவை பல்கலைக்கழகம், அவரை மதிப்புறு பேராசிரியர் ஆக ஏற்று, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரைப் பேணிப் பாதுகாத்து, அவருடைய வழிகாட்டுதலில், தமிழ் இலக்கியக் கருத்து அரங்குகளையும், பின் நவீனத்துவச் சிந்தனைகளையும், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்களிடம், அடுத்த நூற்றாண்டை நோக்கி அவர்களை இட்டுச் செல்லவும் ஆற்றியுள்ள பணி மகத்தானது. ரசிகமணியின் தாக்கத்தோடும், பொக்கைவாய்ப் சிரிப்போடும், குழி விழுந்த கண்களில் பகலவனைப் போல ஒளிவீசும் பார்வையோடும் அவர் வாழ்ந்த நாள்கள் ஒவ்வொன்றும், தமிழுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கு உரம் ஊட்டியது. வரமாக வாய்த்தது.

50 ஆண்டுகாலமாக தொடர்பு

50 ஆண்டுகாலமாக தொடர்பு

முன்னோர் மரபையும், பின்வரும் உலகையும், இணைத்த மையப்புள்ளி கி.இரா. அவர்கள், நம் நெஞ்சங்களில் என்றென்றும், நிலைத்த புகழுடன் இருப்பார். தமிழ் என்று சொன்னாலே நமக்கு எப்படி உள்ளம் பூரிக்கின்றதோ, அதைப்போல, கி.இரா. என்கின்ற இரண்டு எழுத்துகள், தமிழ் உள்ளவரை, தமிழர்கள் உள்ளவரை, இலக்கியங்கள் உள்ளவரை, புன்னகை பூத்துக் குலுங்கும். கி.இராவுடன் எனது தொடர்பு, 50 ஆண்டுகளைக் கடந்தது. அவ்வப்போது அவரது நலம் விசாரித்துக் கொள்வேன். கி.இரா. அவர்களை ஆசிரியராகக் கொண்டு, கதைசொல்லி என்ற இலக்கிய இதழைத் தொடர்ந்து நடத்தி வருகின்ற கே.எஸ். இராதாகிருஷ்ணன், அவருக்கு நெருக்கமாகவும், தொடர்ந்து தொடர்பிலும் இருந்து வந்தார்.

பறந்ததே கரிசல் குயில்

பறந்ததே கரிசல் குயில்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கி.இரா. அவர்களுடைய 85 ஆவது பிறந்த நாளை, தலைநகர் சென்னையில் நடத்தி, அவரைச் சிறப்பித்தோம். நூற்றாண்டை வெகு சிறப்பாகக் கொண்டாட, தமிழ் இலக்கிய உலகம் ஆர்வத்துடன் காத்திருந்த வேளையில், அந்தக் கரிசல் குயில் பறந்து விட்டது. கி.இரா.வை இழந்து வாடும் இலக்கிய ஆர்வலர்கள், அவரது கரிசல் இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனைப் பேருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

வேல்முருகன் இரங்கல்

வேல்முருகன் இரங்கல்

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட இரங்கல்: கரிசல் இலக்கியத்தின் தந்தையும்,தமிழின் மிக மூத்த எழுத்தாளருமான அய்யா கி.ராஜநாராயணன்.அவர்கள் வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். தனது 99 வயது வரை எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்த அய்யா அவர்களின் இறப்பு தமிழ் எழுத்துலகிற்க்கும்,தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

English summary
MDMK General Secretary and Rajya Sabha MP Vaiko Condoled the demise of the Legendary Tamil Writer Ki Rajanarayanan (KiRa).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X