100 பாடல்கள்..காயத்ரி மந்திர மெட்டில் வாழ்வியல் பாடல்- வைரமுத்துவின் நாட்படு தேறல் 2வது முன்னோட்டம்
சென்னை: கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாடல் தொகுப்பின் 2-வது முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் பாடல்களின் தேவை தீர்ந்துகொண்டே வருகிறது அல்லது குறைந்துகொண்டே போகிறது. திரைப்படங்களில் பாடல்கள் திரிந்து போகலாம். ஆனால், தமிழர்களின் வாழ்வில் பாடல்களின் தேவை தீர்ந்து போவதில்லை என வைரமுத்து அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும் பாடல்கள் இல்லாத வாழ்வு ஓசையில்லாத உலகம் போன்றது; பறவைகள் இல்லாத காடு போன்றது. பாடல்கள் இனிமேல் திரைப்படங்களிலும் இருக்கலாம் அல்லது திரைக்கு வெளியிலும் இருக்கலாம். குயில் வனத்திலும் இருக்கலாம்; வானத்திலும் இருக்கலாம் என்பதுபோல. இப்போதும் சில படங்களில் சில பாடல்கள் அருமையோ அருமை; பல படங்களில் வெறுமையோ வெறுமை எனவும் வைரமுத்து கூறியிருந்தார்.
அத்துடன் தாம் பெரிதும் மதிக்கும் கலைஞர்களில் என் கைக்கெட்டியவர்களோடு கைகோத்தேன். 100 பாடல்கள் - 100 இசையமைப்பாளர்கள் - 100 பாடகர்கள் - 100 இயக்குநர்கள் என்ற திட்டத்தில் இறங்கியிருக்கிறேன். இந்த நூறு பாடல்களுக்கு 'நாட்படு தேறல்' என்று பெயர் வைத்திருக்கிறேன் எனவும் அறிவித்திருந்தார்.

மேலும் இதன் முதல் முன்னோட்டத்தையும் சில நாட்களுக்கு முன்னர் வைரமுத்து வெளியிட்டிருந்தார். இன்று காலை தமது ட்விட்டர் பக்கத்தில் நாட்படு தேறல் 2-வது முன்னோட்டத்தை வைரமுத்து வெளியிட்டுள்ளார்.
அதில், காயத்ரி மந்திர மெட்டில் 360 பாகையில் வாழ்வியல் பாடும் பாடல்; பாடியவர் ஹரிஹரன்; இயக்கம் ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர் என குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து.