எம்எல்ஏ வேண்டாம்.. அமைச்சர் பதவிக்கு குறி? எம்பி தேர்தலில் நிற்கும் வானதி, நயினார்? அந்த தொகுதியிலா?
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வரும் நிலையில் பாஜக கட்சி தமிழ்நாட்டில் யாரை போட்டியிட வைக்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறதாம்.
லோக்சபா 2024 தேர்தல் நடக்க இன்னும் நீண்ட காலம் இல்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அதிகபட்சம் 8 -9 மாதங்கள்தான் இருக்கிறது. இந்த நிலையில்தான் நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது.

இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.
கடந்த சில நாட்களாக வரக்கூடிய கருத்து கணிப்பு செய்திகளும் கூட இந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவே வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 5-10 தொகுதிகளில் பாஜக இந்த முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
பிரபலம் இல்லை: தமிழ்நாட்டில் பாஜக ஒன்றும் அவ்வளவு பிரபலமான கட்சி கிடையாது. பெரிதாக தலைவர்களும் இல்லை. தேசிய அளவில் பாஜக பிரபலமாக இருந்தாலும் தமிழ்நாட்டில் அத்தனை பிரபலம் கிடையாது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தயவில் பாஜக 4 இடங்களை வென்றது.

வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தேர்தலில் வென்றனர். இந்த நிலையில்தான் தற்போது லோக்சபா தேர்தலிலும் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய இரண்டு பேரும் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாமல் இவர்கள் களமிறங்க உள்ளனர். ஒருவேளை இவர்கள் எம்பி ஆகும் பட்சத்தில் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்வார்கள். அதன்பின் அந்த தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல் வரும்.
நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி எம்எல்ஏவாக உள்ள நிலையில் திருநெல்வேலி எம்பி தேர்தலில் இவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாம். அதேபோல் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில், அவர் கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன காரணம்? : தமிழ்நாடு பாஜகவில் பிரபலமான உறுப்பினர்கள் அதிகம் இல்லை. லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக சார்பாக அண்ணாமலை, எல் முருகன், கரு நாகராஜன், பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன.
அப்படி இருக்க இன்னும் பிரபலமான முகங்களான நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியரை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாம். ஒருவேளை இவர்கள் எம்பி ஆகும் பட்சத்தில் அமைச்சர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. அதோடு இவர்கள் எம்எல்ஏ பதவிகளுக்கு இடைத்தேர்தல்கள் வரும் வாய்ப்புகளும் உள்ளன.
பொதுவாக பல மாநிலங்களில் எம்எல்ஏக்களை பாஜக இப்படி லோக்சபா தேர்தலில் களமிறக்குவது இயல்பாக நடக்கும் விஷயம்தான். அதேபோல்தான் இந்த முறையும் பாஜக தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள எம்எல்ஏக்களை களமிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கான வெற்றி வாய்ப்பு இந்த மாவட்டங்களில் அதிகம் உள்ளதால் பாஜக இந்த நிலைப்பாட்டை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications