அலங்கார ஊர்தி நிராகரிப்பு.. மத்திய அரசு சொன்னது என்ன?.. உண்மையில் தமிழக அரசு செய்தது என்ன?.. வானதி
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் வேலு நாச்சியாரின் புகழை தனது ட்வீட் மூலம் உலகறிய செய்தவர் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த குடியரசு தின விழாவில் இடம்பெறுவதற்காக தமிழக அரசு சார்பில் அலங்கார ஊர்தி மாடல் அனுப்பப்பட்டது. அதில் சுதந்திர போராட்டத் தியாகிகளான வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியார் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான வீரர்களை எதிர்பார்ப்பதாக கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அது போல் இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு யாரென்றே தெரியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தெரிகிறது. 3 முறை சோதனைகளில் வெற்றியடைந்த நிலையில் 4ஆவது ரவுண்டில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியும் தமிழக ஊர்தி இடம்பெறவில்லை. இதனால் தமிழகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெற்றது.

வீரம் துணிச்சல்
வேலு நாச்சியாரின் பிறந்தநாளான கடந்த ஜனவரி 3ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது வீரத்தையும் துணிச்சலையும் நினைவுகூர்ந்திருந்தார். அப்படிப்பட்ட நிலையில் வேலு நாச்சியாரை தெரியாது என மத்திய அரசு அதிகாரிகள் கூறியது ஏன் என்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானதி ஸ்ரீனிவாசன்
இதுகுறித்து நியூஸ் 7 தொலைகாட்சிக்கு பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் அளித்த பேட்டியில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏன் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். கூடுதலாக வாய்ப்பு கொடுக்கப்பட்டு மத்திய அரசு கூறியதில் எந்த மாறுதல் செய்யப்பட்டது, எது செய்யப்படவில்லை. மத்திய அரசு கேட்டது என்ன என்பதை தமிழக அரசு வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

சிவகங்கை அரண்மனை
வேலு நாச்சியார் பிறந்த நாளன்று அவர் பிறந்த சிவகங்கையில் அவரது அரண்மனை முன்பு 5 ஆயிரம் பேரை திரட்டி அவரது பெருமைகளை சொல்லியது பாஜக. அவ்வாறிருக்கும் போது வேலு நாச்சியாரை பாஜக மறந்துவிட்டோம் என கூறுவது எப்படி? வேலு நாச்சியாரின் பிறந்தநாள் அன்று பிரதமர் நரேந்திர மோடி ஒரு ட்வீட் போட்டார். இதன் மூலம் உலகளவில் வேலு நாச்சியாரின் புகழை கொண்டு சேர்த்தார்.

மத்திய அரசு
அலங்கார ஊர்தியில் இருந்த நிர்வாக ரீதியிலான சிக்கல்களோ அல்லது அவர்கள் கேட்ட கேள்விக்கு தமிழக செய்தித் துறை செய்த தவறின் காரணமாக புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். இதை வைத்து அரசியல் செய்கிறார்களே, உண்மையில் அங்கு என்ன நடந்தது? மத்திய அரசு கூறிய தவறுகளை சரி செய்யாமல் தங்கள் இயலாமைக்கு மத்திய அரசை ஏன் குற்றம்சாட்டுகிறார்கள். தமிழக செய்தி துறை மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
Recommended Video

திமுக அரசு
காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழகத்திற்கு கிடைத்த வாய்ப்புகளை விட தற்போது மத்தியில் பாஜக ஆட்சியில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதே திமுக ஆட்சியில் காங்கிரஸ் மத்தியில் ஆண்ட போது அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட போது இவர்கள் என்ன செய்தார்கள்? தமிழக தலைவர்கள் குறித்து இந்தியா முழுக்க எடுத்துச் செல்ல நல்ல வாய்ப்பு, இதை திமுக அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக தமிழகம் முழுவதும் அலங்கார ஊர்தியை அனுப்புவதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். இதே ஊர்தியை இந்தியா முழுவதும் அனுப்பட்டும். நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம் என்றார் வானதி.












Click it and Unblock the Notifications