சும்மா கிடைக்கவில்லை வன்னியர் உள் இட ஒதுக்கீடு.. 35 வருடங்களாக.. தொடர்கிறது நீண்ட போராட்டம்!
தனி இடஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம் 1987ஆம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தியது. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழக அரசின் அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் அமலில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கான 20 சதவீதத்தில் வன்னியர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இட ஒதுக்கீடு பெறுவதற்காக 1987ஆம் ஆண்டு வன்னியர்கள் நடத்திய போராட்டம் தொடங்கி இன்றைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரை இந்த வன்னியர் இட ஒதுக்கீடு பிரச்சினை கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு இல்லையெனக் கூறி பாமக நீண்ட காலமாக போராட்டங்களை நடத்திவந்தது. தனி இடஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம் 1987ஆம் ஆண்டு வன்னிய சமுதாய மக்கள் முன்னெடுத்த இந்த போராட்டம் காரணமாக தமிழகமே ஸ்தம்பித்தது.
1989ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமாக உள்ள வன்னிய சமுதாயம் அரசின் இடஒதுக்கீடு பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்தான் இருந்தது. பெரும்பான்மையான மக்களை கொண்ட இந்த சமூகத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தனர். சமூகத்தில் ஏற்கெனவே முன்னேறிவிட்ட பிற சமூகத்தினருடன் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போட்டியிட முடியவில்லை.
மொத்தமுள்ள 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் தங்கள் சமூதாய மக்கள் வெறும் ஒரு சதவிகிதப் பலன்களைத்தான் அனுபவிக்கிறார்கள். ஏற்கெனவே சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறிய சமூகங்களுடன் போட்டியிட முடியவில்லை. அது நியாயமுமில்லை. அதனால், எங்கள் சமூகத்துக்கு எங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப, 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வன்னியர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

1986 சாலை மறியல்
1986 ஆம் ஆண்டு சாலைமறியல் , ரயில் மறியலில் ஈடுபட்டனர். அரசுக்கு இதற்கெல்லாம் செவிசாய்க்கவில்லை. வன்னிய சமுதாய மக்களை ஒன்றுதிரட்டி ஒரு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வன்னிய சமுதாய தலைவர்கள் முடிவெடுத்தனர். குற்றாலத்தில் நடந்த கூட்டத்தில்தான் தொடர் சாலை மறியலில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராக இருக்கக்கூடிய மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சங்க போராட்டத்தை முன்னெடுத்து சென்றார்.

ராமதாஸ் கைது
1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வடதமிழகம் போர்க்களமானது. ராமதாஸ் திண்டிவனம் வந்து போராட்டத்தில் கலந்துக்கொண்டார். சாலை ஓரங்களில் வளர்ந்திருந்த உயர்ந்த மரங்களை எல்லாம் அடியோடு வெட்டி சாய்த்து சாலையில் வீசப்பட்டது. போக்குவரத்தை முடக்கி அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இதனையடுத்து டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு போராட்டத்தை ஒடுக்கியது. துணை ராணுவப்படை வந்தது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 21பேர் கொல்லப்பட்டனர். போராட்டத்தில் பங்கெடுத்த 18000 க்கும் மேற்பட்ட வன்னிய சமுதாய மக்கள் கைது செய்யப்பட்டனர்.

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் எம்பிசி பிரிவு
இதனையடுத்து 1989ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்குள் "மிகவும் பிற்படுத்தப்பட்டோர்" என்ற பிரிவை உருவாக்கியது. அதில் வன்னியர் உட்பட வேறு பல சாதியினரும் இடம்பெற்றனர். இதற்கு வன்னிய சமூகத் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்தபோதும், மருத்துவர் ராமதாஸ், மிகக்கடுமையாக விமர்சித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி
அதே காலகட்டத்தில்தான், பாட்டாளி மக்கள் கட்சியையும் தொடங்கினார். வன்னியர் சமூகத்துக்கு கருணாநிதி துரோகம் இழைத்துவிட்டதாகவே கருதினாலும், பின்னாளில் கருணாநிதிக்குப் பாராட்டுவிழா நடத்தினார் மருத்துவர் ராமதாஸ். தொடர்ந்து, 20 சதவிகித தனி இட ஒதுக்கீட்டுக்கும் குரல் கொடுத்துவந்தார். வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனியாக 20 சதவிகித உள் ஒதுக்கீடு தர வேண்டுமென தொடர்ந்து கோரிவந்தது. அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்றன.

அதிமுக அரசின் அவசரச்சட்டம்
இந்நிலையில் கடந்த 2021, பிப்ரவரி 26ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், 2021 சட்டசபை தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் சில நிமிடங்களுக்கு முன்பாக ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது அதிமுக அரசு. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளிப்பதாக அறிவித்தது. அதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்து, தமிழக அரசிதழிலும் அது வெளியிடப்பட்டது. தொடர்ந்து தி.மு.கவின் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் அது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

தென் மாவட்டங்களில் எதிர்ப்பு
தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்தது. அதன் அறிக்கை வெளியாகாத நிலையில், இந்த இடஒதுக்கீடு தற்காலிகமானது எனவும், 6 மாதத்திற்கு பின்னர் சாதிவாரிக் கணக்கீடு முடிந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டிருந்தார். ஆனால் தென் மாவட்டங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

சாதிவாரியான கணக்கெடுப்பு
முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுவே சட்டரீதியான இட ஒதுக்கீடு அமைய வாய்ப்பு அளிக்கும். ஆகவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சாதிவாரி கணக்கீடு தொடர்பான முடிவுகள் வெளிவரும் வரை நிறுத்தி வைக்கவும், அதுவரையிலும் வன்னிய சமூகத்தினருக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதிக்கவும் வேண்டும் என மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசாணை வெளியிட்ட திமுக
கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து திமுக அரசுப் பொறுப்பேற்றுக் கொண்டது. அப்போது வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான கோரிக்கைகள் திமுக அரசிடம் முனவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 26ஆம் தேதி 10.5% உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான அரசாணையை திமுக அரசு வெளியிட்டது.

உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் சிறப்பு அமர்வாக நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக்கூறி 10.5% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது எனக்கூறி சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் பாமக உள்ளிட்டோர் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 23ம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் இன்று காலை நீதிபதிகள் எல்.நாகேஸ்வராவ் மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளனர்.

மாநில அரசுக்கு அதிகாரம்
'உள் ஒதுக்கீடு வழங்கும் போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தர வேண்டும்.உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் சரியான காரணங்களை கூற வேண்டும். சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது. வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை. வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் அரசியல் சட்டத்தின் 14,16வது பிரிவுகளுக்கு விரோதமானது. வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லும் எனவும் உத்தரவிட்டனர்.

அடுத்த கட்ட நடவடிக்கை
வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் தமிழ்நாடு அரசு, பாமக உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பெற ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications