சாதி சான்றிதழ் தர மாட்றாங்க என தற்கொலை செய்த நபர் பழங்குடியே கிடையாது: நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!
சென்னை : ஜாதி சான்றிதழ் தர மறுப்பதாகக் கூறி உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரல்ல என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் நரி குறவர் சமூகத்தை சேர்ந்தவர் எனவும், அவரது மகனுக்கு சாதி சான்றிதழ் கோரி அரசு நிர்வாகத்திடம் விண்ணப்பித்தும், மறுக்கப்பட்டதாகக் கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் அருகே வடக்கு கோட்டை சாலையில் அமைந்துள்ள மாற்று முறை குறை தீர்வு மன்ற கட்டடம் அருகே வந்த வேல்முருகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

தீக்குளித்து தற்கொலை
அங்கிருந்த காவல்துறை உடனடியாக தடுத்து காயங்களுடன் மீட்ட அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களை பதிவு செய்தன. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பலியான வேல்முருகன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும் பழங்குடியினர் சான்றிதழ் கோரி கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி அவர் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் செப்டம்பர் 23ஆம் தேதி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பழங்குடியே அல்ல
தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அவரது விண்ணப்பம் செப்டம்பர் 26ஆம் தேதி நிராகரிக்கப்பட்டதாகவும் தன்னுடைய சகோதரர் எனக் கூறி, பழங்குடியினர் இனத்தை சேர்ந்த இளவரசன் என்பவரின் சான்றை தாக்கல் செய்திருக்கிறார் எனவும், இளவரசனுக்கும், வேல் முருகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் கூறப்பட்டிருந்தது.

விசாரணை தள்ளிவைப்பு
இதையடுத்து கள ஆய்வின்போது அண்டை வீட்டார்கள் இடமோ தெருவில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை எனக் கூறிய நீதிபதிகள், வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரா என்பது குறித்து, மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து விசாரிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.மாவட்ட வருவாய் அதிகாரி, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், அண்டை வீட்டார்கள், வேல்முருகனின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், சகோதரர் எனக் கூறிய இளவரசனிடமும் விசாரணை நடத்தி இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications