எம்ஜிஆர் கொடுத்த செக்கை வாங்கல.. ஜெயலலிதாவுக்கு நெருக்கமான விசுவாசி.. யார் இந்த செங்கோட்டையன்?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளைப் பறித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலம் முதல் அக்கட்சியில் இருந்து வருபவர் செங்கோட்டையன். எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் தீவிர விசுவாசியாக இருந்த செங்கோட்டையன், கட்சியில் ரொம்ப சீனியர். 9 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர்.
கடந்த சில மாதங்களாகவே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மனக்கசப்பு நீடித்து வந்த நிலையில், மனம் திறந்து பேசப்போகிறேன் என அறிவித்திருந்தார் செங்கோட்டையன். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுக ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்களை இணைக்க வேண்டும். 10 நாட்கள் கெடு" எனத் தெரிவித்தார். இந்நிலையில், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளைப் பறித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

யார் இந்த செங்கோட்டையன்?
ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்த செங்கோட்டையன், தனது அரசியல் பயணத்தை திமுகவில்தான் துவங்கினார். 1972ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டபோது, எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவில் இணைந்தார் செங்கோட்டையன். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான இவர் கட்சியில் இணையும்போதே எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1975 ஆம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவைச் சிறப்பாக நடத்தி முடித்ததன் மூலம் எம்ஜிஆரிடம் நற்பெயரைப் பெற்று கவனம் ஈர்த்தார் செங்கோட்டையன். அந்தக் பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக முடித்ததால் மிகவும் மகிழ்ந்த எம்.ஜி.ஆர் செங்கோட்டையனுக்கு ஒரு பிளாங்க் செக்கை விழா மேடையிலேயே கொடுத்திருக்கிறார். ஆனால் அதனை செங்கோட்டையன் வாங்க மறுத்தார். அதன்பிறகான காலகட்டத்தில் எம்ஜிஆரோடு பிரசாரத்திற்கு செல்வது என்று நெருக்கமானார்.
9 முறை எம்.எல்.ஏ
எம்ஜிஆரின் முதல் ஆட்சிக் காலத்தில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார் செங்கோட்டையன். 1980ஆம் ஆண்டு முதல் கோபிசெட்டிப் பாளையத்தில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறார். 1980-ல் இருந்து தற்போது வரை அதே தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். 1996ல் மட்டும் தோல்வி அடைந்தார். மற்ற அனைத்து முறையும் எம்.எல்.ஏவாக வென்றிருக்கிறார் செங்கோட்டையன்.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு 1989ஆம் ஆண்டில் அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று இரண்டு அணிகளாக பிளவுற்றது. அந்த நேரத்தில் ஜெயலலிதா அணியில் இருந்தவர், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் மொத்தம் 9 முறை எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார் செங்கோட்டையன்.
ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்றவர்
தமிழக அரசியல் வரலாற்றில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் துரைமுருகன் வரிசையில், அதிக முறை சட்டமன்ற உறுப்பினரான செங்கோட்டையன், அதிமுகவில் சூப்பர் சீனியராக இருக்கிறார். இப்போதைய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் சீனியர் தான் செங்கோட்டையன். 2014-ல் ஜெயலலிதா சிறை செல்ல நேரிடும்போதும், 2017ல் சசிகலா சிறை செல்ல நேரிடும்போதும் செங்கோட்டையனின் பெயர்தான் முதல்வர் பதவிக்கு அதிகமாக அடிபட்டது.
எம்ஜிஆருடன் நற்பெயரைப் பெற்றதைப் போலவே, ஜெயலலிதாவிடமும் சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்த செங்கோட்டையன், ஜெயலலிதாவின் பயணத் திட்டங்களை வகுப்பது என்று முக்கிய முகமாக இருந்திருக்கிறார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக திகழ்ந்த செங்கோட்டையன், நிகழ்ச்சி நிரல்களை சிறப்பாக வகுப்பதில் வல்லவராக இருந்துள்ளார்.
அதிமுக அமைச்சரவையில்
1991 - 1996 ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், 2011 - 2016 ஆட்சிக் காலத்தில் விவசாயம், தகவல் தொழில்நுட்பம், வருவாய்த்துறை என்று பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இறுதியாக, 2016 - 2021 காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்திருந்தார் செங்கோட்டையன்.
எடப்பாடி உடன் முட்டல்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல குளறுபடிகள் நடந்தபோதெல்லாம் அமைதி காத்த செங்கோட்டையன், கடந்த சில மாதங்களாக தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி வந்தார். கடந்த பிப்ரவரியில், அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததாலேயே புறக்கணித்ததாக கூறிய செங்கோட்டையன், 'இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னைச் சோதிக்காதீர்கள்' என்று ஆவேசமாகப் பேசினார்.
புயலைக் கிளப்பிய செங்கோட்டையன்
தொடர்ந்து, சென்னையில் நடைபெறாமல் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தவர், மார்ச் மாதத்தில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து பேசினார். மார்ச் மாதத்திலேயே, சட்டப்பேரவை கூடும் முன் சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து பேசியது, அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது, அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தபோதும் சட்டசபையில் தனியாக அமர்ந்திருந்தது என்று செங்கோட்டையன் செயல்பாடுகள் அதிமுகவில் புயலைக் கிளப்பின.
கடந்த ஜூலை மாதம் கோவையில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தை தொடங்கியபோதும், ஈரோட்டில் பரப்புரை செய்தபோதும் பங்கேற்காமல் புறக்கணித்த செங்கோட்டையன், நேற்று, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் 10 நாட்கள் கெடு என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் தான் அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. 1972 ஆம் ஆண்டு முதல் 54 ஆண்டுகளாக அதிமுகவில் பல்வேறு பதவிகளில் இருந்து வந்த செங்கோட்டையன் தற்போது எடப்பாடி பழனிசாமியால் பதவி பறிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications