தவெகவை கண்காணிக்கும் திமுக, அதிமுக! விஜய் கைக்குப் போன ரிப்போர்ட்.. அடுத்து எடுக்கப் போகும் அஸ்திரம்
சென்னை: அரசியலுக்கு புதிய வரவாக இருந்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். இன்று சேலத்தில் மாநில அளவிலான கொள்கை விளக்க முதல் பொதுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் 13,000க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட இருக்கிறது. குறிப்பாக ஐந்து கழக மண்டலங்கள், 120 மாவட்டங்கள், 12,500 கிளைக் கழகங்கள் ஆகியவற்றில் அடுத்தடுத்து பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
எதிர்பார்த்ததை விட தமிழக வெற்றி கழகத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதை பார்த்து உற்சாகம் அடைந்திருக்கிறார் விஜய். கட்சி ஆரம்பித்த புதிதில் விஜய் ஒரு பொருட்டே அல்ல என கூறி வந்த அதிமுகவும் திமுகவும் தற்போது விஜயின் செல்வாக்கு குறித்து ரகசிய கணக்கெடுப்பை நடத்தி வருகின்றன.
இது ஒரு புறம் இருக்க வீட்டிலிருந்தே அரசியல் செய்கிறார் என்ற தன் மீதான விமர்சனத்தை உடைக்கும் வகையில் விஜய் பல விவகாரங்களில் நேரில் களத்தில் இறங்க முடிவு செய்து இருக்கிறார். அந்த வகையில் ஏற்கனவே பரந்தூர், சிவகங்கை, சென்னை ஆர்ப்பாட்டம் என விஜய் கள அரசியலுக்கு வந்தது அந்தக் கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

விஜய்
இந்த நிலையில் மிகப்பெரிய அளவிலான மக்கள் செல்வாக்கை திறட்டும் வகையில் வரும் 25ஆம் தேதி மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. முதல் மாநில மாநாட்டை விட மிகப் பெரிய அளவில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருகிறது தமிழக வெற்றிக் கழகம் தரப்பு. மாநாட்டுக்கு தென் மாவட்டங்களில் இருந்து 20 லட்சம் பேர் என்ற டார்கெட் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை அடுத்து மாநாட்டுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
இது ஒரு புறம் இருக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இரண்டு தொகுதிகளுக்கு ஒரு கூட்டம் என்ற வகையில் இந்த சுற்றுப்பயண திட்டம் வடிவமைக்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக முழுவதும் கிளைக் கழக அளவில் கொள்கை விளக்க பொது கூட்டங்களை நடத்த விஜய் உத்தரவிட்டிருக்கிறார். இதற்கான தீர்மானமும் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
விஜய் தேர்தல் பிரச்சாரம்
இன்று சேலத்தில் முதல் மாநில அளவிலான கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து மிகப் பெரிய திட்டத்தை கையில் வைத்திருக்கிறார் விஜய் என்கின்றனர் அவரது கட்சியினர். குறிப்பாக ஐந்து மண்டல கொள்கை விளக்க பொதுக் கூட்டங்கள், 120 மாவட்ட கழக அளவிலான பொதுக்கூட்டங்கள், 12,500 கிளைக் கழக அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.
2026 தேர்தல்
மண்டல அளவிலான பொதுக்கூட்டங்களில் விஜய்யும், மாவட்ட அளவிலான பொதுக்கூட்டங்களில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், சிடிஆர் நிர்மல் குமார், அருண் ராஜ் மற்றும் கொள்கை விளக்க பொதுச் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த அனைத்து கூட்டங்களையும் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடித்த விஜய் உத்தரவிட்டிருக்கிறார். 2026 ஜனவரியில் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆனதற்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications