கஜானா காலி.. திடீரென அடுத்தடுத்து 2 பெரிய அறிவிப்புகளை வெளியிட்ட விஜய்.. பின்னணி என்ன?
சென்னை: முதல்வராக பொறுப்பேற்ற மேடையிலேயே விஜய் கஜானா காலி என்று அறிவித்த நிலையில், தற்போது ஆட்சி அமைத்த 100 நாட்களில் 2 மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். விலையில்லா 3 சிலிண்டர் மற்றும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் விரிவாக்கம் ஆகிய திட்டங்களை விஜய் அறிவித்ததற்கு பின்னணியில், சில கணக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதில் சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ளன. காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய 3 கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த 3 கட்சிகளும் தவெக மீது பெரிதாக விமர்சனங்களை முன் வைக்கவில்லை.

ஆனால் சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இரு கட்சிகளும் நேரடியாகவே பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. ஏற்கனவே பாலன் இல்லத்தில் சிஜேபி கட்சியினர் போராட இடம் கொடுத்ததை விஜய் ரசிக்கவில்லை. இதனிடையே குஜிலியம்பாறை வட்டாட்சியர் கம்யூனிட்ஸ்ட் கட்சியினரை கணக்கெடுக்க உத்தரவிட்ட அறிக்கை வெளியிடப்பட்டது கம்யூனிஸ்ட்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
இதன் பின்னணியில் தலைமைச் செயலாளர் சாய்குமார் இருப்பதாக சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். மறுபுறம் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கல்வித்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையும் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகவே அமைந்தது. இந்த இரு விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது முதல்வர் விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோல் கம்யூனிஸ்ட்கள் நாளுக்கு நாள் முன் வைத்து வரும் விமர்சனம் மக்களிடையே தவெகவுக்கு சிக்கலை உருவாக்கி வருகிறது. இதனால் தவெக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை நடத்த வேண்டும் என்ற திட்டத்திற்கு வந்துள்ளது. இடைத்தேர்தலில் அத்தனை தொகுதிகளிலும்க் வென்றுவிட்டால், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், தவெகவுக்கு பிரச்சனையில்லை.
இதன் காரணமாகவே இடைத்தேர்தலை கணக்கிட்டு 2 மிகப்பெரிய திட்டங்களை விஜய் வெளியிட்டுள்ளதாக கோட்டை வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன. விலையில்லா 3 சிலிண்டர் மற்றும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் விரிவாக்கம் ஆகிய இரு திட்டங்களுக்கும் தொடங்கப்பட்ட பின்னரே, இடைத்தேர்தல் நடக்கும் சூழல் உள்ளது.
இதனால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் எடுத்துவிடக் கூடாது என்பதால், கஜானா காலியாக இருந்தாலும் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெல்ல வேண்டும் என்பதில் விஜய் தீவிரமாக இருப்பதால், கூட்டணி கட்சிகளும் கவனமாகவே கையாண்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications
