திருப்பூருக்கு ரெட் அலர்ட்.. அதுவும் தென்மேற்கு பருவமழைகாலத்தில்.. வரலாற்றில் முதல்முறை.. வெதர்மேன்
சென்னை: தென் மேற்கு பருவமழையின் வரலாற்றில் திருப்பூர் மாவட்டம் இந்த அளவுக்கு மழையை சந்தித்ததே இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் நேற்றைய தினம் அறிவித்துள்ள அறிக்கையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இடியுடன் கூடிய கனமழையும் 29, 30 ஆகிய தேதிகளில் அதிக மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம்
திருப்பூரில் ஜம்மனை, சங்கிலிப்பள்ளம் ஆகிய மாவட்டத்தில் அமராவதி, நொய்யல் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மழை அதிகம் பெய்யும்போது வீடுகளில் வெள்ளம் புகும் அபாயம் உள்ள இடங்களில் உள்ளோர் வீட்டை விட்டு வெளியேறி அருகேயுள்ள அரசு முகாம்களில் தங்க வேண்டும்.

கால்நடைகள் பாதுகாப்பு
கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இடியுடன் கூடிய கனமழை என்பதால், வீட்டிலிருந்து பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பில்லாத கட்டடங்கள், உயரமான கட்டடங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மரங்களின் அருகே நிற்க வேண்டாம். பொதுமக்களுக்கு உதவும் வகையில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள்
தீயணைப்பு துறையினர் சார்பில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளனர். லைப் ஜாக்கெட், நைலான் கயிறு, மணிலா ரோப், மின் ரம்பம், ரப்பர் படகு உள்ளிட்ட பொருட்களுடன் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கிறார்கள். அது போல் மின்வாரிய ஊழியர்களும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க உரிய உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

மின் கம்பிகள்
மழையின் போது மின்கம்பம், மின்மாற்றி , மின் கம்பிகளுக்கு அருகே மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த செய்தியை சுட்டிக்காட்டி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் தென்மேற்கு பருவமழை காலத்தில் திருப்பூர் இத்தகைய மழையை பெரும் என்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இந்த மழை சீசனில் திருப்பூர் லேசான மழையையே பெறும். நேற்று பெய்தது போல் மழை பெய்யாது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னையில் மழை
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழலே நிலவி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இன்று மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications