அடுத்த 24 மணி நேரம்.. பயங்கரமாக இருக்கும்.. வேலையை காட்டும் மோச்சா புயல்.. அடடா.. அப்போ தமிழ்நாடு?
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள மோச்சா புயல் தீவிர புயலாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தற்போது அது புயலாக மாறி உள்ளது. 6 நாட்களுக்கு முன்புதான் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது வலிமை அடைந்து வருகிறது.

இது 4 நாட்களுக்கு முன் காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடைந்தது. நேற்று முதல்நாள் மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதை தொடர்ந்து வங்கக்கடலில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக நேற்று வலிமை அடைந்தது. இன்று காலை தீவிர புயலாக மாறியது.
அதிதீவிர புயலாக உருவாகும் இந்த புயலுக்கு மோச்சா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நர்கிஸ் சூறாவளி, தெற்காசியாவில் இயற்கை பேரழிவுகளில் ஏற்பட்ட பெரிய புயல்களில் ஒன்றாக இப்போதும் பார்க்கப்படுகிறது, அந்த புயலை போலவே தற்போது உருவாகி வரும் மோச்சா புயலும் உள்ளது.
பொதுவாக கோடைகாலத்தில் தமிழ்நாட்டை புயல் தாக்காது. ஒடிஸாவை சில சமயங்களில் தாக்கி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில்தான் தற்போது உருவாகி வரும் மோச்சா புயல் ஒடிசா அல்லது மேற்கு வங்கத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இது மியான்மரை 175 கிமீ வேகத்தில் தாக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மோச்சா புயல் குறித்து சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், கடந்த 12 மணி நேரங்களில் மோச்சா புயல் மிகப்பெரிய அளவில் மாற்றம் அடைந்து உள்ளது. இந்த புயல் தனது கியரை மாற்றி.. தற்போது தீவிர புயலாக மாறி உள்ளது. அதி தீவிர புயலாக மாறுவதற்கான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.

மோச்சா சூறாவளி மேலும் தீவிரமடைவதற்கான சிறப்பான அறிகுறிகளை தற்போது காட்டுகிறது. அடுத்த சில மணிநேரங்களில் மிகக் கடுமையான சூறாவளியாக மாற இந்த புயல் தயாராகி வருகிறது.
அடுத்த 24 மணி நேரம்தான் இந்த புயலில் மிக மிக முக்கியமான மணி நேரம் ஆகும். அதில் அச்சப்பட வேண்டிய விஷயம், இந்த புயல் வலிமை இழப்பதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. கரையை கடக்கும் வரை இந்த புயல் வலிமையை இழக்க வாய்ப்பே இல்லை என்றுதான் கருதப்படுகிறது.
இந்த மோச்சா புயல் தற்போது வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. அடுத்த சில மணி நேரங்கள் தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகரும். இதனால் தென் இந்தியாவில் தீபகற்ப பகுதியில் மழை மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வானம் மேகமின்றி காணப்படும்.

இதனால் தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும். வெப்பநிலை வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக கூடும். சென்னையில் வானம் இன்று மேக மூட்டத்துடன் காணப்படும். இந்த மோச்சா புயல் இப்போது மிகவும் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது என்பதை IMD உறுதிப்படுத்துகிறது. இன்னும் 24 மணிநேரம் சாதகமான சூழல் நிலவும் நிலையில், இது மிகக் கடுமையான சூறாவளி புயலாக மாறுவதை தடுக்க முடியாது, என்று சென்னை ரெயின்ஸ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications