இனி 5 இல்ல 4 தான்.. எடப்பாடி பழனிசாமியின் சைலண்ட் மூவ்.. ‘அஸ்திவாரமே’ - ஆடிப்போன ஓபிஎஸ் டீம்!
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கும் நேரத்திலும், ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் வேறொரு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
ஏற்கனவே அதிமுக தலைமை அலுவலகம், கட்சி பேனர்கள், சுவர் விளம்பரங்கள் என அனைத்திலும் ஓபிஎஸ் படத்தை நீக்கியும், அவரது பெயரை அழித்தும் வந்த நிலையில், அடுத்ததாக முக்கியமான நடவடிக்கையில் இறங்கியுள்ளது ஈபிஎஸ் டீம்.
அதிமுக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடையாள அட்டையில், தற்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரின் படங்களும் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் படத்தை நீக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.
’கவசம்’ முத்துராமலிங்கத் தேவரை வைத்து உருவான பஞ்சாயத்து! நேரடியாக மோதும் ஓபிஎஸ்-இபிஎஸ்! பரபர அதிமுக!
குவார்ட்டர், செமி.. 'ஞாபகம் இருக்கா?’ - ஃபைனலும் எடப்பாடி பழனிசாமி தான்.. ஈபிஎஸ் டீம் போடும் கணக்கு!

பொதுச் செயலாளர்
அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது ஈபிஎஸ் தரப்பு. இதையொட்டி, 2532 பொதுக்குழு உறுப்பினர்களிடம் பிரமாண பத்திரம் பெற்றனர். மேலும் சமீபத்தில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பொதுச் செயலாளர் தேர்தல் பற்றி ஆலோசித்தனர்.

குறுக்கே வந்த சுப்ரீம் கோர்ட்
அதன்படி, விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டுவது என்றும், அப்போது அனைத்து பணிகளையும் திட்டமிட்டு, அக்டோபர் மாதத்திலேயே பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவது என்றும் அதில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு ஒப்புதலை பெறுவதற்காக மீண்டும் ஒரு பொதுக்குழுவையும் கூட்டுவது என்றும் திட்டமிட்டு வந்தனர். இதற்கிடையே தான் பொதுக்குழு செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இடைக்காலத் தடை
அப்போது, ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர் எனக் கூறி அந்த தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினர். அதற்கு நீதிபதிகள் நீங்கள் பொறுப்பில் இருக்கும் போது எதற்காக அவசர அவசரமாக தேர்தலை நடத்த முயற்சி செய்கிறீர்கள் என்று ஈபிஎஸ் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். மேலும் பொதுக்குழு தேர்தலை நடத்துவதற்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து, விசாரணையை நவம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ப்ரீத்திங் டைம்
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ப்ரீத்திங் டைம் கிடைத்துள்ளது. இந்த ஒன்றரை மாதத்தை தங்கள் தரப்பை கட்சிக்குள் பலப்படுத்துவதற்கான பணிகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது ஓபிஎஸ் டீம். ஏற்கனவே புதிய நிர்வாகிகள் நியமனத்தை தீவிரப்படுத்திய ஓபிஎஸ், அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் நிர்வாகிகளை நியமித்து முடிப்பார் என்றும், அதன்பிறகு, கூட்டங்கள், சுற்றுப்பயணம் ஆகியவற்றை மேற்கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், அதிமுக தொண்டர்களிடம் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெறும் பணிகளையும் தீவிரமாக முன்னெடுக்க உள்ளனர்.

ஈபிஎஸ் ஆலோசனை
அதேநேரம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பொதுக்குழு வழக்கு பற்றி மீண்டும் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனர். மேலும், கட்சியில் தங்களது பலத்தை அதிகரிக்கும் வகையில் பொதுக் கூட்டங்கள் நடத்தும் திட்டத்தை விரிவுபடுத்தவும், மீண்டும் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்வதற்கான ஷெட்யூலை தயார் செய்வது பற்றியும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் ஈபிஎஸ். பொதுச் செயலாளர் தேர்தலை இப்போது நடத்த முடியாது எனும் சூழலில், அதை நோக்கிய மற்ற ஆக்ஷன்களில் இறங்கலாம் என முடிவெடுத்துள்ளனர்.

புதிய அடையாள அட்டை
அதாவது, அதிமுக உறுப்பினர் அட்டையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரின் படங்களும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரின் கையெழுத்துகளும் இடம்பெற்றிருக்கும். ஜெயலலிதா இருந்தபோது ஜெயலலிதாவின் பெரிய படத்துடன் இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரின் படங்களுக்கு பச்சை வண்ண உறுப்பினர் அட்டைகள், அதிமுக தொண்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.

ஓபிஎஸ் படம் வேண்டாம்
இந்நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவிட்டதால், கட்சி அறிக்கை, கட்சி அலுவலகங்கள், தலைமை அலுவலக பேனர் உட்பட அனைத்து இடங்களிலும் ஓபிஎஸ் படங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புறக்கணித்து விட்டனர். சுவர் விளம்பரங்களிலும் கூட ஓபிஎஸ் பெயரையும், படத்தையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பெயிண்ட் அடித்து அழித்த காட்சிகளும் அரங்கேறின.

4 பேர் படம் மட்டும்
இந்நிலையில் தான் அதிமுக உறுப்பினர் அட்டைகளிலும் ஓபிஎஸ் படத்தை நீக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக, ஓபிஎஸ் படம் இன்றி, அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகிய நால்வரின் படங்கள் அடங்கிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கான வேலைகளில் ஈபிஎஸ் தரப்பு சைலண்டாக இறங்கியுள்ளதாம். அடையாள அட்டைகள் அச்சிடும் பணி முடிந்ததும், மாவட்ட வாரியாக அட்டைகள் மாவட்ட செயலாளர்களிடம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு மட்டும்
மாவட்ட செயலாளர்களிடம் அட்டைகளை வழங்கும்போதே, நம் ஆதரவாளர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் என்றும், ஒன்றிய, கிளை அளவில் கணக்கெடுத்து ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு மட்டுமே உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படும் என்றும் அவர்களே பொதுக்குழு கூட்டத்திலும், பொதுச் செயலாளர் தேர்தல் நடந்தால் அதிலும் கலந்துகொள்ளலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எப்போது விநியோகம்
எனினும், தற்போது இடைக்கால தடை இருப்பதால் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தும் பணியில் தற்போது ஈடுபட முடியாது என்பதால், உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை முடியும் வரை, அடையாள அட்டை விநியோகிக்கும் பணியை நிறுத்தி வைக்கலாமா, அல்லது சாதாரண கட்சி நடவடிக்கையாக இதனை கருதலாம் என்பதால், இப்போதே விநியோகிக்கலாமா என்பது பற்றியும் ஆலோசனை நடந்து வருகிறதாம்.

முற்றிலும் ஓரம்கட்ட
அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி கையில் இருப்பதால், தேர்தல் ஆணையம் தொடங்கி எல்லா கடிதப் போக்குவரத்துமே அவர்களுக்கே செல்கிறது. இந்நிலையில், அடையாள அட்டையிலும் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படுவது ஓபிஎஸ் தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் அடித்தளமே தொண்டர்கள் தான். அவர்களுக்கான உறுப்பினர் அட்டையில் இருந்தும் ஓபிஎஸ் படத்தை தூக்க ஈபிஎஸ் முயற்சிப்பது ஓபிஎஸ் தரப்பு ஷாக் கொடுத்துள்ளது. ஈபிஎஸ்ஸின் இந்தத் திட்டத்தை முறியடிக்க என்ன செய்வது என்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசனையில் இறங்கியுள்ளனர்.