ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் முகூர்த்த டிரேடிங்.. இன்று பங்குகள் வாங்கினால் லாபம் கொட்டுமாம்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைகளில் இன்று (நவம்பர் 8) முகூர்த்த டிரேடிங் நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த சிறப்பு டிரேடிங் அமர்வுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர். இந்த அமர்வில் பங்குகளை வாங்குவதும் விற்பதும் வெறும் நிதி பரிவர்த்தனையாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. புதிய சம்வத் ஆண்டை நல்ல தொடக்கத்துடன் வரவேற்கும் பாரம்பரியமாகவும் இது கருதப்படுகிறது.
வழக்கமாக சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும். ஆனால், தீபாவளி நாளில் மட்டும் இந்திய பங்குச்சந்தைகளில் முகூர்த்த சிறப்பு டிரேடிங் அமர்வு நடக்கும். அதென்ன ஸ்பெஷல் முகூர்த்த டிரேடிங்.. அதன் வரலாறு, முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முகூர்த்த டிரேடிங் என்றால் என்ன?
முகூர்த்தம் என்றால் இந்து மரபில் சுபமான அல்லது மங்களகரமான நேரம் என்று பொருள். தீபாவளியன்று இந்திய பங்குச்சந்தைகள் இந்த முகூர்த்த சிறப்பு வர்த்தக அமர்வை நடத்துகின்றன. வழக்கமாக காலை 9.15 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறும் பங்குச்சந்தை வர்த்தகத்தை போல அல்லாமல், தீபாவளியன்று குறிப்பிட்ட சுப நேரத்தில் இந்த அமர்வு நடைபெறும். இதற்கான நேரத்தை பங்குச்சந்தைகள் சில நாட்களுக்கு முன்பே அறிவிக்கும்.
இந்த நேரத்தில் பங்குகளை வாங்கினால் வரும் ஆண்டு முழுவதும் செல்வமும் செழிப்பும் கிடைக்கும் என்பது முதலீட்டாளர்களிடையே நிலவும் நம்பிக்கை. இதனால் பலர் இந்த நாளில் குறைந்த அளவிலாவது பங்குகளை வாங்கி முதலீட்டை தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேநேரம் இது ஏதோ சும்மா விளையாட்டிற்காக நடைபெறும் நிகழ்ச்சி அல்ல. இந்த அமர்விலும் உண்மையான பங்குகள் வாங்கப்படுகின்றன, விற்கப்படுகின்றன. வழக்கமான வர்த்தகத்தை போலவே அனைத்து விதிகளும் பொருந்தும்.
வரலாறு என்ன?
குஜராத்தி, மார்வாரி வணிகர்கள் தீபாவளியன்று புதிய கணக்கு புத்தகங்களை தொடங்கி, அவற்றுக்கு பூஜை செய்யும் வழக்கத்தை கடைப்பிடித்து வந்தனர். செல்வத்தின் அடையாளமாக கருதப்படும் லட்சுமி தேவியை வழிபட்டு, புதிய சம்வத் ஆண்டை வரவேற்பதும் இந்த மரபின் ஒரு பகுதியாகும்.
இந்த பாரம்பரியத்தை பங்குச்சந்தையிலும் கொண்டுவரும் வகையில், மும்பை பங்குச்சந்தை 1957ஆம் ஆண்டு முகூர்த்த டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. பின்னர் 1992ஆம் ஆண்டு தேசிய பங்குச்சந்தையும் இதை பின்பற்ற தொடங்கியது. ஆரம்பத்தில் நேரடியாக பங்குச்சந்தையில் நடந்த இந்த அமர்வு, இப்போது முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் நடக்கிறது.
ஏன் முக்கியம்?
தீபாவளி புதிய சம்வத் ஆண்டின் தொடக்கமாக கருதப்படுவதால், முதலீட்டாளர்கள் இந்த நாளில் பங்குகளை வாங்குவதை நல்ல தொடக்கத்தின் அடையாளமாக பார்க்கின்றனர். குறிப்பாக வணிகர்கள் புதிய கணக்குகளை தொடங்குவதுடன், தங்களது முதலீட்டு பயணத்தையும் இந்த நாளில் ஆரம்பிக்க விரும்புகின்றனர். சில குடும்பங்களில் குழந்தைகளின் பெயரிலும் பங்குகளை வாங்கி, நீண்டகால முதலீட்டுக்கான முதல் அடியை எடுத்து வைக்கின்றனர். பங்குச்சந்தையில் நவீனத்தையும் இந்தியாவின் பாரம்பரிய நம்பிக்கைகளையும் இணைக்கும் ஒரு நிகழ்வாக முகூர்த்த டிரேடிங் பார்க்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டுக்கான முகூர்த்த டிரேடிங் இன்று நடைபெறுகிறது. மாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை இந்த சிறப்பு முகூர்த்த டிரேடிங் நடைபெறுகிறது. இந்த வர்த்தகம் நல்ல தொடக்கத்தை குறிக்கும் அடையாளமாக இருந்தாலும், லாபத்திற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே, பண்டிகை உணர்வில் அவசரமாக பங்குகளை வாங்காமல், ஆராய்ந்து முதலீடு செய்வதே சிறந்தது.


Click it and Unblock the Notifications
