Foreshore estate: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! விஜய்யின் முடிவுக்கு இப்படி ஒரு காரணமா?
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் ரூ 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம், சட்டசபை வளாகத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் ஜோதிடரின் பேச்சை கேட்டு விஜய் இவ்வாறு முடிவு எடுத்துள்ளதாகவும் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் சுமார் 1200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகத்தை கட்ட தமிழக அரசு 26 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளது.

இதற்கான அரசாணையும் நேற்று முன் தினம் (செப்.9) வெளியானது. பட்டினப்பாக்கத்தின் ஃபோர்ஷோர் எஸ்டேட் குடியிருப்புகள் மற்றும் விளையாட்டு மைதானப் பகுதிகள் உள்ளிட்ட 25.16 ஏக்கர் நிலமும், வருவாய்த்துறை ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்ட 1.2 ஏக்கர் நிலமும் சேர்க்கப்பட்டு மொத்தம் 26.36 ஏக்கர் நிலப்பரப்பு இத்திட்டத்திற்காக முழுமையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு 350 மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு தலைமைச் செயலகம் வந்துவிட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை சரி செய்ய சென்னை லைட்ஹவுஸ் முதல் அடையாறு திருவிக பாலம் வரை 3.5 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் இந்த இடம் மெரினா வணிக மையம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த குடியிருப்புவாசிகளை வெளியேற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட பல்வறு வழக்குகள் காரணமாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. அண்மையில் இந்த வழக்குகளை முடித்து வைத்த சென்னை ஹைகோர்ட், வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகளுக்கு மாற்று இடம் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நிலப்பிரச்சினைகள் முடிவுக்கு வந்தன. தற்போது இந்த இடத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் எத்தனையோ இடங்கள் இருக்க பட்டினம்பாக்கத்தை ஏன் விஜய் தேர்வு செய்தார் என்பது குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவிக்கிறார்கள். அதில் முக்கியமாக இரு விஷயங்கள் பேசப்படுகின்றன.
ஒன்று நீலாங்கரையை போல் விஜய்க்கு பட்டினம்பாக்கத்திலும் ஒரு இல்லம் அமைந்துள்ளது. அங்குதான் அரசியல் தொடர்பான பேச்சுக்களை அவர் பேசுவாராம். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் கூட நீலாங்கரை வீட்டில் இருந்து பட்டினம்பாக்கம் இல்லத்திற்கு விஜய் சென்று அங்கு தவெக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதை செய்திகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். வீட்டிற்கு பக்கத்தில் இருந்தால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள் இடையூறு இல்லாமல் இருக்கும் என விஜய் நினைத்திருக்கலாம்.
இரண்டாவது காரணம்- யாரோ ஜோதிடர்கள் அவருக்கு அறிவுறுத்தியிருக்கலாம் என்கிறார்கள். தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைந்தால் வங்கக் கடலை ஒட்டி கிழக்கு நோக்கி நீர்நிலைகள் இருப்பது என்பது நாட்டின் தலைவனுக்கும் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கும் பெரும் புகழை தரும் என்ற நம்பிக்கை உள்ளதாம்.
பொதுவான ஒரு காரணமும் உண்டு- அதாவது திமுக ஆட்சிக் காலத்தில் 2008ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது ஓமந்தூரார் அரசின் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணிகள் தொடங்கின. இதற்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த கட்டடத்தை கட்டி முடிப்பதற்குள் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் கட்டி முடிக்கப்பட்ட ஓமந்தூரார் வளாகத்தை அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றினார். அது போல் விஜய்யும் கட்ட போகும் தலைமைச் செயலகம் கட்டி முடிக்க 5 அல்லது 6 ஆண்டுகள் ஆகும். அப்படியிருக்கும் போது அவரது கட்சி அடுத்த முறை ஆட்சிக்கு வராவிட்டாலும் தலைமைச் செயலகத்தை கட்டிய வரலாற்றில் அவரது பெயரும் இடம் பெறும் என்ற ஒரு காரணத்தையும் சொல்கிறார்கள். எது எப்படியோ பட்டினப்பாக்கம் பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைக்கப்படும் என்ற ஒரு விஷயமும் நிலைக்காது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு போல் பரந்தூரில் விவசாயத்தை பாதுகாக்க விமான நிலைய திட்டத்தை ரத்து செய்த விஜய் அரசு, மீனவ மக்களுக்கு பிரச்சினை என தெரிந்தும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கொண்டு வருவது தவறு என்கிறார்கள். எந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டினால் நன்றாக இருக்கும்? அல்லது ஜார்ஜ் கோட்டையிலேயே இருப்பது சரியா என்று கமென்ட்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications
