"ரொம்பவே சீக்கிரம்.." அடித்து ஆட ரெடியாகும் ஓ.பன்னீர்செல்வம்! உற்று கவனிக்கும் எடப்பாடி டீம்
சென்னை: அதிமுகவில் இன்னுமே உட்கட்சி மோதல் ஓயாத நிலையில், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பினர் மாறி மாறி சாடி வருகின்றனர். இதற்கிடையே இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி பூசல் தொடர்ந்து வருகிறது. கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்பதில் தொடங்கிய மோதல் இந்தாண்டு முழுக்க தொடர்ந்து வருகிறது.
கட்சி இப்படி இரு பிரிவுகளாக உள்ளதால், கட்சியின் முழுமையாக எதிர்க்கட்சியாகச் செயல்பட முடிவதில்லை என்று சிலர் வருத்தம் தெரிவிக்கின்றனர். இருந்தாலும் கூட மோதல் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அதிமுக
எப்போது அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற பேச்சு எழுந்ததோ, அப்போது தொடங்கிய இந்த மோதல் இன்னுமே தொடர்கிறது. இந்த விவாதம் ஆரம்பித்த உடன் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், ஓபிஎஸ் பங்கேற்காத நிலையில், எடப்பாடி பழனிசாமியை தற்காலிக பொதுச்செயலாளர் ஆக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிலேயே ஓ பன்னீர்செல்வத்தை நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பதிலாக எடப்பாடி உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

வழக்கு
அப்போதில் இருந்தே இரு தரப்பும் தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று சொல்லி வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டப்பட்டதற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் நீதிமன்றம் சென்றிருந்தது. அதில் சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடிக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்த நிலையில், அதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

குழப்பம்
இது ஒரு பக்கம் இருக்க தற்போது அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடமே உள்ளது. மேலும், முக்கிய நிர்வாகிகள் பலரும் கூட எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே சில மாவட்டங்களில் ஏற்கனவே எடப்பாடி அணிக்குச் சென்றவர்கள் கூட மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு வந்தனர். இதனால் குழப்பமான ஒரு சூழலே அதிமுகவில் இருந்தது. மேலும், எடப்பாடி தரப்பில் திமுக அரசுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போராட்டங்கள் எதிலும் ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை..

எடப்பாடி டீம்
எடப்பாடி தரப்பில் ஏற்கனவே எதிர்க்கட்சி துணைத் தலைவராக உதயகுமாரை நியமிக்கச் சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர். அதை இன்னும் சபாநாயகர் ஏற்கவில்லை. இந்த விவகாரம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அதேபோல மறுபுறம் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்த ஓபிஎஸ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாகத் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக அறிவித்துள்ளது எடப்பாடி தரப்பு.

ஓபிஎஸ் பிளான்
இதற்குப் பதிலடி தரும் வகையில் ஓபிஎஸும் மாநிலம் முழுக்க நிர்வாகிகளை நியமித்து வந்தார். அவர்களுடன் தொடர்ச்சியாக அவ்வப்போது ஆலோசனையும் கூட நடத்தி வந்தார். இந்தச் சூழலில் தான் ஓபிஎஸ், விரைவில் போட்டி பொதுக்குழு கூட்டப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதில் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, நெருக்கடி கொடுக்க ஓபிஎஸ் திட்டமிட்டு வருவதாகச் சொல்லப்பட்டது.

ரெடியாகும் ஓபிஎஸ்
இதற்கிடையே இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓபிஎஸ் சில பரபர கருத்துகளை தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பெரியகுளம் செல்வதற்காகச் சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதிமுக பொதுக்குழுவை ஓபிஎஸ் கூட்ட உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பான கேள்விக்கு "கூடிய விரைவில் பொதுக்குழு கூட்டப்படும்" என்று பதிலளித்தார்.

கணக்கு வழக்கு
அதேபோல 2021-22ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்கை இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்தார். இந்த கணக்கைத் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது. இது எடப்பாடி தரப்பிற்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட்டது. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ஓபிஎஸ், "நான் பொருளாளராக இருந்தபோது போன மார்ச் 21&22 கொடுத்த கணக்கைத் தான் தாக்கல் செய்துள்ளனர். அதைத்தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications