3ம் தலைமுறை அமைச்சர்.. செங்கல் காட்டி மைல்கல் தொட்ட திமுக “வாரிசு”! அரசியலில் என்ன செய்தார் உதயநிதி?
சென்னை: வரும் டிசம்பர் 14 ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெறுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் என்ன சாதித்தார் என்பது பற்றி சிறிய தொகுப்பு உங்களுக்காக.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி தனது அரசியல் வாரிசாக தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நிறுத்தியதில் இருந்து தொடங்கிய வாரிசு அரசியலுக்கு எதிரான குரல்கள் இன்றும் ஓயவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா என தேசிய தலைவர்கள் தொடங்கி, அதிமுக மூத்த தலைவர்கள், தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் என பலரும் இன்று வரை வாரிசு அரசியலை விமர்சித்து உள்ளார்கள்.

மு.க.ஸ்டாலின் மீதான விமர்சனம்
திமுக இளைஞரணி தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு, 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்று முதலமைச்சராக பதவியேற்று தன்னை வலுவான அரசியல் தலைவராக 50 ஆண்டுகால அரசியல் பயணத்தில் தனது ஆளுமையை நிரூபித்த பிறகும் மு.க.ஸ்டாலினை வாரிசு என்றே விமர்சித்து வருகிறார்கள்.

உதயநிதியின் அரசியல் பிரவேசம்
இந்த சூழலில்தான், சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் பிரபலமான மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மெல்ல அரசியல் பிரவேசம் எடுக்கத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்த நொடியில் இருந்தே தனது தந்தை ஸ்டாலின் மீது வைக்கப்பட்ட வாரிசு அரசியல் விமர்சனங்கள் உதயநிதியையும் துளைக்கத் தொடங்கின.

உதயநிதிக்கு முக்கியமான ஆண்டு
இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் திமுகவில் தீவிரமாக செயல்பட்டார் உதயநிதி ஸ்டாலின். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பயணித்து பிரச்சாரம் செய்தார். அதில் திமுக பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதன் தொடர்ச்சியாக திமுகவின் முதன்மை அணியான இளைஞரணியின் செயலாளராக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேர்வு செய்யப்பட்டார் உதயநிதி.

இளைஞரணி தலைவர்
அன்றிலிருந்து திமுக இளைஞரணி வீருகொண்டு செயல்பட தொடங்கியது. இளைஞரணியில் ஆட்களை சேர்க்கும் பணியில் முழு மூச்சாக இறங்கிய உதயநிதி ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து 30 லட்சத்துக்கும் அதிகமானோரை திமுகவில் இணைத்தார். திராவிட கொள்கைகளை இளைஞரணி மூலம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தினார்.

சிக்சர் விளாசிய உதயநிதி
திமுகவுக்கு எதிராக சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் பரப்பப்படும் அவதூறுகள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு கருத்தரங்குகள், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். அனைத்துக்கும் மேலாக 2021 சட்டமன்றத் தேர்தல் உதயநிதி ஸ்டாலின் இறங்கி சிக்சர்களை பறக்கவிடும் களமாக அமைந்தது எனலாம்.

செங்கல் டூ மைல்கல்
இந்த தலைமுறை இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் புரியும் விதமாக கலகலப்பாக பேசி, அப்போதைய மத்திய மாநில அரசுகளின் குறைகளை சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்தார். குறிப்பாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை தொடங்காத மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கல்லை காட்டியது திமுகவுக்கே "ஹைலைட்டாக" அமைந்தது.

தவிர்க்க முடியாத சக்தி
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமாவில் வெற்றிப் பயணத்தை தொடங்கிய உதயநிதி எய்ம்ஸ் செங்கல் மூலம் தனது 2 வது இன்னிங்சான அரசியல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கினார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏவாக தேர்வாகி அமைச்சராக பதவியேற்க உள்ள உதயநிதி தற்போது திமுகவின் தவிர்க்க முடியாத சக்தியாக அவர் வளர்ந்து நிற்கிறார்.












Click it and Unblock the Notifications