குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம்.. 70 ஆயிரம் வீடுகள்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
சென்னை: தமிழகத்தில் குடிசை வீட்டில் வசிக்கும் ஏழை மக்களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ள ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கும் வகையில் "வெற்றி வீடு" திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் முதற்கட்டமாக 70 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் யாருக்கெல்லாம் வீடு கிடைக்கும், என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், பணம் எப்படிக் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு சொந்த வீடு வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் வெற்றி வீடு திட்டம். முதலமைச்சர் அறிவித்துள்ள 'வெற்றி தமிழகம்' தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் மொத்தம் 5 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக 2026-27ம் நிதியாண்டில் 70 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன.

வெற்றி வீடு திட்டம் அரசாணை
இதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:
வெற்றி வீடு திட்டத்தின் கீழ், ஒரு வீட்டிற்கு ரூ.5 லட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்படும். குறைந்தபட்சம் 360 சதுர அடி முதல் அதிகபட்சம் 500 சதுர அடி வரை சமையலறையுடன் வீடுகள் கட்டிக்கொள்ளலாம். அனைத்து வீடுகளும் கான்கிரீட் கூரையுடன் கட்டப்பட வேண்டும்.
குடிசை வீடுகள், மண் சுவர்களைக் கொண்ட வீடுகள் மற்றும் உறுதியற்ற கூரைகளை கொண்ட வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஊராட்சி அலுவலகம்
இந்த திட்டத்திற்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்காக, ஊரகப் பகுதிகளில் மொபைல் செயலி மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்படும். கணக்கெடுப்பின் அடிப்படையில் தயாரிக்கப்படும் முதற்கட்டப் பட்டியல், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளின் பெயர்ப் பட்டியலும் ஊராட்சி அலுவலகம் மற்றும் அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
எனினும், 2026-27ஆம் நிதியாண்டில் கட்டப்படவுள்ள முதல் 70 ஆயிரம் வீடுகளுக்கான பயனாளிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையிடம் ஏற்கெனவே உள்ள வீடற்றோர் பட்டியலில் இருந்து தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கடன், வழிகாட்டு நெறிமுறைகள்
வீடு கட்டுவதற்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள், பயனாளிகளின் வசதிக்கு ஏற்ப இரண்டு கட்டங்களாகத் துறை மூலம் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கையில் 5 சதவீதம், மாவட்ட ஆட்சியரின் விருப்ப ஒதுக்கீடாக ஒதுக்கப்படும். இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட அவசரச் சூழல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கணக்கெடுப்பில் விடுபட்ட தகுதியான பயனாளிகளுக்கு இந்த ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் நிதியாக ரூ.2,600 கோடியும், கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து ரூ.900 கோடியும் பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும், 2026-27ஆம் ஆண்டு முதல் 2030-31ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெற்றி வீடு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி வீடு திட்டத்தின் ஹைலைட்ஸ்
இந்தத் திட்டத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ஒரு வீட்டிற்கான நிதியுதவி உயர்த்தப்பட்டிருப்பதுதான். இதற்கு முன்பு ஊரகப் பகுதிகளில் வீடு கட்டுவதற்கான அலகுத் தொகை ரூ.3.10 லட்சமாக இருந்தது. இப்போது வெற்றி வீடு திட்டத்தின் கீழ் இது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு வீட்டுக்கு ரூ.1.90 லட்சம் கூடுதல் நிதி கிடைக்கிறது.
கிராமப்புறங்களில் குடிசை வீடுகள், மண் சுவர்கள் மற்றும் வலுவற்ற கூரைகளைக் கொண்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
அதேபோல், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கும் முன்னுரிமை வழங்கப்படும். மொத்த வீடுகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 40 சதவீதமும், மற்ற பிரிவினருக்கு 60 சதவீதமும் ஒதுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி ஒதுக்கீடு வழங்கப்படும்.
யாருக்கெல்லாம் தகுதி இல்லை?
ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் உள்ள குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் பயனடைய முடியாது. ஏற்கெனவே அரசு வீட்டுவசதித் திட்டங்களில் வீடு பெற்றவர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு கிடையாது. சொந்தமாக வீடு கட்டுவதற்கான நிலமும், அதற்கான பட்டா அல்லது உரிமை ஆவணமும் வைத்திருக்க வேண்டும்.
அரசு வழங்கும் ரூ.5 லட்சம் ஒரே தவணையாக கிடைக்காது. அடித்தளம், ஜன்னல் மட்டம், மேற்கூரை, கட்டுமான நிறைவு என நான்கு கட்டங்களாகப் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நிலத்தின் அளவு போதுமானதாக இல்லாவிட்டால் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் வீடு கட்டிக்கொள்ளலாம்.
வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாகப் பணம் தேவைப்பட்டால், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் ரூ.50,000 வரை 6 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அதேபோல், கூட்டுறவு அல்லது வணிக வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை வீட்டுக் கடனும் பெறலாம்.
அதுமட்டுமல்ல, இந்த கடன்களை முறையாக திருப்பி செலுத்துபவர்களுக்கு, வருடத்துக்கு 3 சதவீத வட்டி மானியத்தை அதிக பட்சம் 15 ஆண்டுகள் வரை அரசு வழங்கும். மேலும், தனிநபர் கழிப்பறை வசதி இல்லாத தகுதியான பயனாளிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் - ஊரகம் திட்டத்தின் கீழ் ரூ.12000 செலவில் கழிப்பறையும் கட்டித் தரப்படும்.
பயனாளிகள் தேர்வு எப்படி?
இந்த திட்டத்தில் யார் யாருக்கெல்லாம் வீடு வழங்கலாம் என்பதை எப்படி தேர்வு செய்வார்கள் தெரியுமா? இதற்காக அதிகாரிகள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள். அதேபோல இதற்கெனவே மொபைல் ஆப் பயன்படுத்தப்படும். ஏற்கனவே ஊரக வளர்ச்சித் துறையிடம் உள்ள வீடற்றோர் பட்டியலில் இருந்தும் முதல் கட்டமாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். கணக்கெடுப்பு முடிந்ததும் முதற்கட்டப் பட்டியல் கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
கடைசியாக தேர்வு செய்யப்படுபவர்களின் பெயர்களும் , அலுவலகங்கள் மற்றும் அரசு வெப்சைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதனால், இந்த திட்டத்தில் வீடு பெற விரும்புபவர்கள் தங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் கணக்கெடுப்பு மற்றும் பயனாளிகள் தேர்வு குறித்த விவரங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்...!!




Click it and Unblock the Notifications
