ரூ.13 லட்சம் கோடி கடனுக்கு மத்தியில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யும் மரிய வில்சன் யார்? பின்னணி
சென்னை: தவெக தலைமையிலான தமிழக அரசின் முதல் பட்ஜெட்டை இன்று சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். ஆட்சிக்கு வந்த பிறகு தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. அதே நேரத்தில், மாநிலத்தின் கடன் சுமை மற்றும் நிதி பற்றாக்குறை அரசுக்கு பெரிய சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் பட்ஜெட் தாக்கல் செய்யும் மரிய வில்சன் யார்.. இவரது பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
தவெக அரசு கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதில் பட்ஜெட்டில் வராத கடன்கள், அரசின் உத்தரவாதங்கள் மற்றும் பிற நிதி பொறுப்புகள் உள்ளிட்ட மொத்தக் கடன் சுமை சுமார் ₹13.18 லட்சம் கோடியாக உள்ளது. இதில் நேரடி கடன் மட்டும் ₹10 லட்சம் கோடிக்கு அருகே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வரம்பு
2021ஆம் ஆண்டில் தமிழக அரசின் கடன் சுமார் ₹4.8 முதல் ₹5.1 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. ஏற்கனவே உள்ள நிதி பொறுப்புகள் மற்றும் மத்திய அரசின் கடன் பெறும் வரம்புகள் காரணமாக, 2026-27 நிதியாண்டில் சுமார் ₹11,600 கோடி நிதி பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதி விதிமுறைகள் மற்றும் மின்துறை சீர்திருத்த நிபந்தனைகளின் கீழ், தமிழ்நாடு சுமார் ₹1.52 லட்சம் கோடி வரை மட்டுமே கடன் பெற முடியும். இப்படி தற்போதுள்ள செலவுகளையே சமாளிப்பது சவாலாக இருக்கும் நிலையில், புதிய நலத்திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவது கடினமாக இருக்கும் என கூறப்படுகிறது.
தேர்தல் வாக்குறுதிகள்
இதன் காரணமாக தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட ரூ.2500 பெண்கள் நிதியுதவி மற்றும் இளைஞர்களுக்கான நிதியுதவி, மானிய விலையில் கேஸ் சிலிண்டர், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களை தவெக அரசு எப்படி முழுமையாக செயல்படுத்தும் என்பதில் கேள்வி நிலவுகிறது. இந்த சூழலில் நிலைமையை சீர் செய்ய அரசு வருவாய் அதிகரிக்க வேண்டும்.. அல்லது செலவுகளை மறுசீரமைக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்று கட்டாயம் அவசியமாக இருக்கும் என நிதி நிபுணர்கள் கருதுகின்றனர்.
மரிய வில்சன்
நிதியமைச்சர் மரிய வில்சன் அரசியலுக்கு வருவதற்கு கல்வி துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். இவர் தான் கடந்த 2011 முதல் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஜெப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாக இயக்குநராகவும், ஜெப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் செயல்பட்டு வந்தார்.
2001 முதல் 2010 வரை ஜெப்பியார் பொறியியல் கல்லூரியின் நிறுவனர்- இயக்குநராகவும், 2003 முதல் 2010 வரை ஜெப்பியார் சர்வதேச பள்ளியின் நிறுவனர்- இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், ஜெஐடி குளோபல் இன்ஃபோசிஸ்டம் நிறுவனத்தின் இயக்குநராகவும், ஜெஐடி விளையாட்டு அகாடமியின் நிறுவனர் -இயக்குநராகவும் இருந்துள்ளார்.
தவெகவில் இணைந்தார்
அதைத் தொடர்ந்து விஜய் தவெகவை தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்தார். முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி கே.ஜி. அருண்ராஜ், முன்னாள் நீதித்துறை அதிகாரி சி. சுபாஷ், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆர். ராஜலட்சுமி, எஸ். டேவிட் செல்வம், டாக்டர் ஏ. ஸ்ரீதரன் ஆகியோருடன் மரிய வில்சனும் தவெகவில் இணைந்தார்.
1989ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக (ஜானகி அணி) சார்பில் தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட கர்னல் டாக்டர் ஜெப்பியார் போட்டியிட்டார். அதன் பிறகு இவரது குடும்பம் நேரடி அரசியலில் இருந்து விலகியே இருந்தது. சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு ஜெப்பியார் குடும்பம் நேரடியாக அரசியலுக்கு வந்ததுள்ளது. இப்போது தவெகவில் முக்கிய 2ம் கட்ட தலைவர்களில் ஒருவராக மரிய வில்சன் இருக்கிறார். 2025 செப்டம்பரில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, விஜய் பங்கேற்ற முதல் கூட்டம் ஜெப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியில் தான் நடந்தது. அதை ஒருங்கிணைப்பதில் மரிய வில்சன் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
