கசியும் தகவல்கள்..கோட்டையில் கண்காணிக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்..கறுப்பு ஆடு சிக்குமா?
கூடவே இருந்து உளவு பார்த்து எதிர் முகாமிற்கு தகவல் சொல்லும் கறுப்பு ஆடு யார் என்று கண்காணிக்க உத்தரவிட்டுள்ளாராம் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை: தமிழகத்தில் ஆளும் திமுக அரசு கொள்கை ரீதியாக எடுக்கும் முடிவுகள் சூட்டோடு சூடாக எதிர்முகாமிற்கு கசிவது எப்படி என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறாராம் முதல்வர் மு.க ஸ்டாலின். கூடவே இருந்து தகவல்களை கசிய விடும் கறுப்பு ஆடு யார் என்று கண்டுபிடித்து களையெடுக்க உத்தரவிட்டிருக்கிறாராம் முதல்வர்.
பாஜக தலைவர் அண்ணாமலை தினசரியும் அதிரடி பேட்டிகளை அளித்து வருகிறார். தமிழக அரசு சார்பில் கொள்கைரீதியாக எடுக்கும் முடிவுகள் கூட முன்கூட்டியே அவருக்கு தெரிவதால்தான் அதை செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார் என்று நினைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே கோட்டையில் விவாதிக்கப்படும் முக்கிய விசயங்கள் எல்லாமே பாஜகவின் அண்ணாமலைக்கு தெரிந்து விடுகிறது. கூடவே இருந்து உளவு பார்த்து தகவல்களை கசியவிடுவது யார் என்ற கேள்விதான் இப்போது ஆளும் தரப்பில் பேசப்படுகிறது.

ஆளுநர் சந்திப்பு கசிந்தது எப்படி
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கப்போவதாக கோட்டையில் பேசி முடிவெடுக்கப்பட்டது. அதற்கான அப்பாயிண்ட்மெண்ட்டும் பெறப்பட்டது. இந்த தகவலை தெரிந்து கொண்ட அண்ணாமலை அவசரம் அவசரமாக போய் ஆளுநரை பார்த்திருக்கிறார் ஆளுங்கட்சியின் மீது புகார் பட்டியலை வாசித்திருக்கிறார். அப்போதே சந்தேகப்பட்டிருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

அண்ணாமலை அதிரடி புகார்
புதிய சட்டசபையை மாமல்லபுரத்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக அண்ணாமலை வெளியிட்டார். மின்சார கொள்முதல் பற்றி சர்ச்சையை கிளப்பினார். கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து மாவு கொள்முதல் டெண்டர் பற்றி புகார் வாசித்தார். அடுக்கடுக்காக அரசு மீது புகார் பட்டியலை செய்தியளர்கள் சந்திப்பில் கூறி வருகிறார் அண்ணாமலை.

கசியும் தகவல்கள்
அரசின் கொள்கை முடிவுகள் எப்படி வெளியே கசிகின்றன என்று கடும் அப்செட்டில் இருக்கிறாராம். அரசு உயர் அதிகாரிகள் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்கிறது கோட்டை வட்டாரம். கோட்டையில் இருந்து யார் மூலமாக தகவல்கள் கசிகின்றன என்று விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறாராம் முதல்வர் மு.க ஸ்டாலின்.

ஸ்டாலின் அதிர்ச்சி
எதிர்கட்சியினருக்கு குறிப்பாக அண்ணாமலைக்கு தகவல் தரும் அந்த உளவாளி யார் என்பதை உடனடியாக கண்டறியும் முயற்சியில் இருக்கிறாராம் முதல்வர். அரசின் கொள்கை முடிவுகள் இதுபோல வெளியே கசிந்து விடக்கூடாது என்பதால் அண்ணாமலையுடன் தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் யார் என்று ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறதாம். எதிர் முகாமிற்கு உளவு சொல்லும் கறுப்பு ஆடு வகையாக சிக்கினால் தொக்காக வைத்து செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறது ஆளும் கட்சி தரப்பு. ஆடு சிக்குமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications