காலியாகும் தமிழக எம்பி சீட்.. காய் நகர்த்துகிறாரா ப. சிதம்பரம்?.. சோனியா- ராகுல் சாய்ஸ் யார்?
சென்னை: தமிழகத்திலிருந்து காலியாகும் 6 ராஜ்யசபா உறுப்பினர்களில் ஒரு எம்பி சீட்டை பிடிக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அந்த பதவியை பெற காங்கிரஸில் மூத்த நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைக்கு தேர்தல் நடத்தி பொதுமக்கள் வாக்களிப்பு மூலம் எம்பிக்கள் தேர்வாகிறார்கள். ஆனால் மாநிலங்களவைக்கு குறிப்பிட்ட மாநிலத்திலிருந்து 34 எம்எல்ஏக்கள் சேர்ந்து ஒரு ராஜ்யசபா எம்பியை தேர்வு செய்வார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பி பதவிகள் காலியாகின்றன. இந்த 6 இடங்களுக்கு வரும் ஜூன் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 6 இடங்களில் 4 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் அதிமுகவும் போட்டியிடுகிறது. மீதமுள்ள ஒரு இடத்தை திமுக உதவியுடன் பெற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது.

காங்கிரஸ்
இந்த ஒரு பதவியை திமுக , காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க முன் வரும் என்றே தெரிகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸ் தலைமையில் திமுக சந்திக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த ஒரு எம்பி சீட்டை நிச்சயம் திமுக, காங்கிரஸுக்கு விட்டு கொடுக்கும் என்கிறார்கள்.

ராஜ்யசபா எம்பி
இந்த ஒரு ராஜ்யசபா எம்பி பதவி யாருக்கு என்பதில் மூத்த நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறதாம். 2016 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்யசபா எம்பியானார் ப சிதம்பரம். இவரது பதவிக்காலம் ஜூலை 5 இல் முடிகிறது. இதனால் தமிழகத்திலிருந்து எம்பியாக ப சிதம்பரம் நடவடிக்கை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

சத்தியமூர்த்தி பவன்
இதுகுறித்து சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறுகையில், காங்கிரஸில் கோஷ்டி பூசல் உள்ளது. தமிழக காங்கிரஸில் ஒற்றுமையில்லாத நிலையே உள்ளது. மாநிலங்களவை எம்பி பதவியை கட்சியின் மூத்தவர்களுக்கு தர வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள். அந்த வகையில் எம்பி பதவிக்கான ரேஸில் ப சிதம்பரம், கே எஸ் அழகிரி, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன.

ராகுல் காந்தி சாய்ஸ் யார்
இவர்களில் ராகுல் காந்தி யாரை தேர்வு செய்கிறார் என்பது கேள்வியாக உள்ளது. இந்த 3 பேரில் ஒருவருக்கு கிடைக்குமா இல்லை இளைஞர்கள் யாருக்காவது எம்பி பதவியை ராகுல் வழங்குவாரா என தெரியவில்லை. இந்த 3 பேரில் ப. சிதம்பரம் மீது கட்சி தலைமைக்கு அதிருப்தி இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன.

கோவா தேர்தல் பொறுப்பாளர்
கோவா சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக ப சிதம்பரம் நியமிக்கப்பட்டார். அங்கு காங்கிரஸ் கட்சி எப்படியும் வெற்றி பெறும் என ப சிதம்பரம் உறுதியளித்திருந்தார். மேலும் கடந்த முறை போன்று வெற்றி பெற்றால் கட்சி மாற மாட்டோம் என காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்களிடம் பாண்டு பேப்பரில் ப.சி. கையெழுத்தையும் பெற்றார்.

2017 இல் 17 இடங்களில் வென்ற காங்கிரஸ்
இந்த புதிய நடவடிக்கைகளால் டெல்லி தலைமை மனம் குளிர்ந்தது. ஆனால் கடைசியில் ரிசல்ட் என்பது தோல்வியே கிடைத்தது. கடந்த முறை காங்கிரஸ் 17 இடங்களில் வென்றிருந்தது. தனி பெரும்பான்மை பெறாவிட்டாலும் அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக இருந்தது. ஆனால் 2022 இல் தேர்தல் பொறுப்பாளராக ப சிதம்பரம் தலைமையில் நடந்த கோவா சட்டசபை தேர்தலில் 11 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் பெற்றது.

ப சிதம்பரம் எம்பியாவாரா?
இதனால் ப சிதம்பரம் மீது சோனியாவும் ராகுலும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் இந்த முறை மாநிலங்களவைக்கு ப சிதம்பரம் தேர்வு செய்யப்படுவாரா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications