வேட்பாளர் யார்? முக்கிய நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் இன்றும் ஆலோசனை.. உள்ளே நுழைந்த ஈரோடு புள்ளிகள்!
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமி தரப்பும் போட்டியிட இருக்கும் நிலையில், வலுவான வேட்பாளரை நிறுத்த ஓபிஎஸ் அணி தயாராகி வருகிறது.
பாஜக போட்டியிட விரும்பினால் தாங்கள் ஆதரவு அளிப்பதாக பாஜக தலைவர்களிடம் பேசிப் பார்த்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், ஈபிஎஸ் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதால், பாஜக களமிறங்க விரும்பவில்லை.
இதையடுத்து ஓபிஎஸ் தனது அணியே இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நேற்று உறுதி செய்துள்ளார். வேட்பாளரை தேர்வு செய்வது பற்றியும், வெற்றி வாய்ப்பு குறித்தும் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் ஓபிஎஸ்.

தயாரான எடப்பாடி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியினரும் தனித்தனியாகப் போட்டியிட உள்ளனர். ஈபிஎஸ் அணி, பூத் கமிட்டி கூட்டங்களை நடத்தி இந்தத் தேர்தலுக்கு தயாராகிவிட்டது.

மா.செக்கள் கூட்டம்
ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், முக்கிய நிர்வாகிகள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும் மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, மருது அழகுராஜ் உள்ள்ளிட்ட நிர்வாகிகள், 87 மாவட்ட செயலாளர்கள் எனப் பரும் கலந்து கொண்டனர்.

போட்டியிட விருப்பம்
இந்தக் கூட்டத்தின்போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் தொகுதி நிலவரம் பற்றியும், வெற்றி வாய்ப்பு பற்றியும் பேசியுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் நிற்பதற்கு ஈரோடு மாவட்டச் செயலாளர்களும், இளைஞர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணிகளின் முக்கிய நிர்வாகிகளும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

செல்வாக்கு மிக்க வேட்பாளர்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பலரும், ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகவும் செல்வாக்குமிக்க, பொதுமக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளரை நமது அணி சார்பில் நிறுத்த வேண்டும். அதேநேரம், எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை அறிவித்த பின்னர் தான் நாம் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனை ஓபிஎஸ்ஸும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஓபிஎஸ் இன்றும் ஆலோசனை
இந்நிலையில், இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளரை தேர்வு தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியுள்ளார். சென்னையில் ஓபிஎஸ் வீட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

ஈரோடு புள்ளிகளும்
மேலும், இந்த ஆலோசனையின்போது, நேற்று இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களும், இளைஞரணி, ஐடி அணிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையின்போது தேர்தல் பணிக்குழு அமைப்பது, விருப்ப மனு விநியோகம், வேட்பாளர் தேர்வு, வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கூடுதல் அக்கறை
அதிமுகவை பொறுத்தவரையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இருதரப்பினர் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளதால் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இருப்பினும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் இரு அணியினருமே மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் பலத்தைக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம், வேட்பாளர் தேர்வில் கூடுதல் சிரத்தை காட்டுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications