டெல்லிக்கு வாங்க.. பொன்னாரை அழைத்து பேசிய அமித் ஷா.. பாஜகவில் திக்திக் மாற்றம்? என்னங்க நடக்குது?
சென்னை: பாஜக முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் திடீரென உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை செய்துள்ளார்.
டெல்லியில் 2 நாட்கள் தங்கி உள்ள அவர்.. முக்கியமான பல ஆலோசனைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சில விஷயங்களை பேசியுள்ளார். டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன் இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இதில் அதிமுக - பாஜக கூட்டணி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

அமித் ஷா எடப்பாடியிடம் மிகவும் சகஜமாக பேசி உள்ளார். கூட்டணி உடைந்த கோபம், அதிமுக - பாஜக இடையே உள்ள மோதலை எல்லாம் காட்டிக்கொள்ளாமல் இயல்பாக பேசி உள்ளார். ஆனால் அதே சமயம் சில விஷயங்களை அடித்து சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்தும். வேறு கூட்டணிக்கு அரித்மேட்டிக் வாய்ப்புகள் கிடையாது. வேறு கூட்டணியால் எதுவும் செய்ய முடியாது.
தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றி சதவிகிதம் பல தொகுதிகளில் குறைவுதான். பாஜக வாக்கு சதவிகிதம்தான் பல இடங்களில் திமுக வெற்றிக்கு காரணம். அதிமுக - பாஜக சேர்ந்து இருந்தால் திமுகவை பல தொகுதிகளில் வெல்ல விடாமல் தடுத்து இருக்கலாம். போனது போகட்டும்.. 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். நமக்கு இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. சில பதவிகள், சில தலைவர்கள் தொடர்பாக நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அதெல்லாம் நமது கூட்டணியில் எதிராக வரக்கூடாது. நம்முடைய இலக்கு.. சபதம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது வெல்வது, என்றெல்லாம் பேசி இருக்கிறார்.
அமைக்கப்படும் குழு
இதெல்லாம் போக எடப்பாடி உடன் பேச பாஜகவில் குழு உருவாக்கப்பட உள்ளது. அதாவது அந்த குழுதான் பாஜக - அதிமுக இடையிலான ஆலோசனைகளை மேற்கொள்ளும். முடிவுகளை எடுக்கும். அந்த குழுதான் கூட்டணி இடங்கள் பற்றிய இறுதி முடிவுகளை கூட எடுக்கும். ஆனால் இந்த குழு பாஜக தலைவர் எடுக்கும் முடிவுகளில் தலையிடாது. இது முழுக்க முழுக்க கூட்டணி பற்றி ஆலோசனை செய்ய மட்டுமே அமைக்கப்படும் குழு என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இப்படி அதிமுக தலைவர்கள் அமித் ஷாவை சந்தித்த பிறகு.. பொன்னார் - அமித் ஷா இடையே இந்த சந்திப்பு நடந்துள்ளது. தமிழக பாஜக தொடர்பாகவும், அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாகவும் இந்த சந்திப்பில் முக்கியமான சில உரையாடல்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பை தொடர்ந்தே டெல்லிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை செய்தார். இதில் பல விஷயங்களை ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள் நியமனம் முடிந்த நிலையில், மாநில தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமிப்பது மட்டுமே பாக்கி இருக்கிறது. மாநில நிர்வாகிகள் குறித்த பட்டியல் கட்சியின் தேசிய தலைமைக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த பட்டியலில் இடம் பெற்றவர்களை ஆராய்ந்து வருகிறது பாஜக மேலிடம். பட்டியலில் இடம்பெற்றவர்களின் ஒவ்வொருவரைப் பற்றிய பின்னணிகளை தற்போது தமிழக பாஜகவிடம் கேட்டுள்ளதாம்.
அந்த பின்னணிகள் கிடைத்து, அதனை ஆராய்ந்ததும் மாநில நிர்வாகிகளுக்கு ஒப்புதல் கிடைக்குமாம். அந்த ஒப்புதலுடன், மாநில தலைவர் யார்? என்பதையும் முடிவு செய்து அறிவிக்கப்படவிருக்கிறது. அனேகமாக இன்னும் 10 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு மாநில தலைவர் யார் என்கிற அறிவிப்பு மேலிடத்திலிருந்து வந்து விடும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் கமலாலய நிர்வாகிகள்.
இடைஞ்சல் கருத்து
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி பற்றி சில மூத்த தலைவர்கள் அமித் ஷாவிடம் பேசி உள்ளார்களாம். அதாவது அதிமுக - பாஜக கூட்டணி ஏன் முக்கியம். திமுகவை எதிர்க்க ஏன் இந்த கூட்டணி அவசியம் என்றும் பேசி உள்ளார்களாம்.
தமிழ்நாட்டில் நாம் தமிழர், விஜய், அதிமுக, பாஜக என்று திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறுகின்றன. அப்படி சிதறினால் திமுகவை வீழ்த்தவே முடியாது. மனஸ்தாபங்களை களைந்து கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் அமித் ஷாவிற்கு மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதை பற்றி ஆலோசிக்கலாம் என்று அமித் ஷாவும் உறுதி அளித்துள்ளாராம். இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலையின் பதவி குறித்த பேச்சுக்கள் கவனம் பெற்று வருகின்றன.
ஏனென்றால் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்பவர். அதிமுக உடன் அவ்வப்போது நட்பாக இருந்தாலும் கூட.. எடப்பாடி பழனிசாமியிடம் அவ்வளவு நட்பாக இல்லை. எடப்பாடிக்கும் - அண்ணாமலைக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் உள்ளன. இப்படி பல கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிமுக - பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை இடைஞ்சலாக இருக்கலாம் என்ற கருத்து வைக்கப்படுகிறதாம்.












Click it and Unblock the Notifications