இதுதான் என் "கெஸ்".. ஒரு வருடத்திற்கு பிளானை தள்ளிப்போட்ட டிடிவி தினகரன்.. அப்போ அதிமுக? என்னாச்சு?
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான விவாதங்கள், வியூகங்கள் வெளியாகி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மௌனம் கலைத்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கி வைத்தது என்னவோ எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். 2024 லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதுதான் இந்த விவாதம் நடக்க காரணம்.
நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார்.
லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்ட மின்சார சட்ட திருத்தம்.. நாடளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி வைப்பு

எடப்பாடி பேச்சு
எடப்பாடியின் இந்த பேச்சு அதிமுகவினர் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. எடப்பாடி சமாதானத்திற்கு தயாராகிறார் போல. திமுகவை எதிர்க்க எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார். இதற்காக அமமுக போன்ற கட்சிகளுடன் அவர் சமரசம் செய்ய போகிறார் என்று பேச்சுக்கள் எழுந்தன. ரத்தத்தின் ரத்தங்கள் மெகா கூட்டணி என்றதும் நினைத்தது 2019 லோக்சபா கூட்டணியில் இருந்தது போல பெரிய கூட்டணி உருவாக்கப்படும். அதோடு அமமுகவும் சேரும் என்றே அதிமுகவினர் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டது.

டிடிவி
இந்த நிலையில்தான் எடப்பாடி பெயரை குறிப்பிடாமல் திடீரென மெகா கூட்டணி அறிவிப்பை வரவேற்று டிடிவி தினகரன் பேசி இருந்தார். திமுகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதற்கு எப்போதும் நேசக்கரம் நீட்டுவோம். திமுக என்ற தீய சக்தியை வீழ்த்துவதற்காக தயாராக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும், என்னவாக இருந்தாலும், எங்கே இருந்தாலும் சரி, மெகா கூட்டணி அமைக்கிறவர்களாக இருந்தாலும் சரி நாம் கூட்டணி அமைத்தால்தான் திமுக என்ற தீய சக்தியை வீழ்த்திய முடியும் என்று டிடிவி தினகரன் பேசினார். ஆனால் அமமுகவை கூட்டணியில் சேர்க்க 1% கூட சான்ஸ் இல்லை என்று திடீரென எடப்பாடி சொன்னார். இதற்கு பதிலடியாக டிடிவி தினகரனும் எடப்பாடியை விமர்சனம் செய்தார் .

என்ன சொன்னார் டிடிவி
உங்க கூட எல்லாமே 0.25 சதவிகிதம் கூட இடம் கிடையாது என்று கூறினார். இவர்கள் இருவரும் எடுத்த கணக்கு கிளாஸால் அதிமுக + அமமுக கூட்டணி உருவாகும் முன்பே உடைந்துவிட்டது. அதே சமயம் காங்கிரஸ் - பாஜக இரண்டில் ஒரு கட்சியுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும். அந்த கூட்டணியை விரைவில் உருவாக்குவோம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் கூட்டணி தொடர்பாக இப்போது அவசரம் காட்ட வேண்டாம். இப்போது தனியாக செயல்படுவோம் என்ற திட்டத்தில் டிடிவி இருப்பதாக கூறப்படுகிறது.

திட்டம் என்ன?
இது தொடர்பாக நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கூட்டணி பற்றி அடுத்த வருடம் நவம்பர் - டிசம்பரில்தான் பேசுவோம். அதுவரை பேச வேண்டிய அவசியம் இல்லை. என்ன மாதிரியான கூட்டணி அமையும் என்ற அனுமானம் எனக்கு இருக்கிறது. பார்க்கலாம் என்று கூறினார். ஒரு வருடத்தில் நிலைமை நிறைய மாறும். பல மாற்றங்கள் அதிமுகவில் கூட ஏற்படலாம். தேர்தல் நடக்க 17 மாதங்களுக்கு மேல் இருக்கிறது. கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகளை ஒரு வருடம் ஒத்தி வைக்கலாம். அடுத்த வருடம் வரை கட்சியை வலுப்படுத்தலாம். அப்போதுதான் அதிக இடங்களை பெற முடியும் என்ற திட்டத்தில் டிடிவி தினகரன் இருப்பதாக அமமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.