நம்பர் பிளேட்டில் சிஎம் 2026 போட்டது ஏன்? விஜய் தந்த விளக்கம் என்ன? புஸ்ஸி ஆனந்த் Open Up
சென்னை: விஜய் மாநாடு தொடர்பாக காவல்துறை கேட்ட 21 கேள்விகள் தொடர்பான பதிலை எப்போது அளிக்க இருக்கிறோம் என்பது பற்றி புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கோட்' திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்குப் பிறகு வெளிவந்த முதல் திரைப்படம் இதுதான் என்பதால் அவரது தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளன. இந்தப் படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

கூடவே Greatest of All Time என்ற படத்தின் தலைப்பு சனாதனத்தை முன்வைப்பதாக விசிக எம்பி ரவிக்குமார் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். அந்தக் கருத்து பற்றி பதிலளித்து வருகின்றனர். மேலும் 'கோட்' படத்தில் விஜய் பயன்படுத்தி இருக்கும் காரின் நம்பர் தட்டில் 'சிஎம் 2026' என பொறிக்கப்பட்டுள்ளதும் சர்ச்சையாகி உள்ளது. இன்னும் கட்சி ஆரம்பித்து அவரது கொள்கைகளைக் கூட சொல்லவில்லை. அதற்குள் தமிழக முதல்வர் கனவில் விஜய் மிதக்கிறார் என்றும் அவரது கனவு வெற்றி பெறப் போவதில்லை என்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
படம் வெளிவருவதற்கு முன்பே சிறப்புக் காட்சிக்கு அனுமதிக் கிடைக்குமா? கிடைக்காதா என்ற நிலை இருந்துவந்தது. இறுதியாக அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்காக விக்கிரவாண்டி அருகே வி சாலை கிராமத்தில் உள்ள மைதானத்தினை தேர்வு செய்து அனுமதி கேட்டு காவல்துறையில் மனு அளித்திருந்தார் புஸ்ஸி ஆனந்த். ஆனால், அதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. மொத்தம் 21 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு காவல்துறை ஆணையர் தரப்பிலிருந்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாநாடு குறிப்பிட்ட நேரத்தில் நடக்குமா? நடக்காதா? என்ற இழுபறி நிலை நிடித்து வருகிறது. இந்நிலையில் இன்று புஸ்ஸி ஆனந்த், கிண்டியில் உள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக வந்திருந்தார். அப்போது அவர் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்திருந்தார். அவரிடம் 'கோட்' படத்தின் தலைப்பு சனாதனம் சர்ச்சை பற்றி விளக்கம் கேட்கப்பட்டது.
அதற்கு ஆனந்த், "நான் படம் பார்த்துவிட்டு வருகிறேன். விஜய் நன்றாக நடித்திருக்கிறார். அவர் படங்களிலேயே இது மிகப்பெரிய வெற்றி படம். இதில் சனாதனம் என்பது எல்லாம் ஒன்றும் கிடையாது. சினிமா என்பது பொழுதுபோக்கானது. அதைப் பொழுது போக்காக மட்டுமே பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்வேன்" என்று பேசி இருக்கிறார்.
அடுத்து விஜய் கார் எண்ணில் சிம் 2026 என போடப்பட்டுள்ளது பற்றிய கேள்விக்குப் பதிலளிக்க முன்வந்த ஆனந்த், "விஜய் பயணமும் எங்களின் பயணமும் அதை நோக்கித்தானே இருக்கிறது. எங்கள் பயணம் அதை நோக்கியதுதான். அதில் மாற்றம் இல்லை" என்று தெரிவித்துள்ளார். அப்படி என்றால் இப்போதே அடுத்த சிஎம் விஜய் என படத்தின் மூலம் சொல்லி இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு அவர் கை எடுத்துக் கும்பிட்டு விடை பெற முயன்றார்.
தொடர்ந்து மாநாடு இடம் பற்றிய சர்ச்சைக்குப் பதில் சொல்ல வந்த ஆனந்த், "கூடிய சீக்கிரம் அதற்கான பதிலைக் கொடுப்போம். காவல்துறை என்ன மாதிரியான கேள்விகளைக் கேட்டுள்ளது என்பது பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆகவே அதை நான் சொல்லத் தேவையில்லை. விரைவில் அதற்காகப் பதிலை நாங்கள் வழங்க உள்ளோம்" என்றவர் நான் எங்கே போவது? வருவது என்றே தெரியாமல் தவிக்கிறேன். ஊடகங்களிடம் இருந்து மறைந்து மறைந்து போக வேண்டி உள்ளது என்று கவலை தரும்படியாக ஒரு செய்தியைக் கூறியுள்ளார்.
ஏன் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த முடிவு செய்தீர்கள் என்றும் அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, "விஜய்க்கு அங்குள்ள நில உரிமையாளர்கள் மாநாடு நடத்த அனுமதி கொடுத்தார்கள். ஆகவே அந்த இடத்தை நாங்கள் தேர்வு செய்தோம். விஜய்க்கும் அந்த இடம் பிடித்திருந்தது. எனவே அங்கே மாநாடு நடத்த முடிவு செய்தோம்" என்று கூறி இருக்கிறார்.
விஜயகாந்த் உருவத்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த வேண்டிய தேவை பற்றி ஆனந்த் பேசும் போது, "இருவரும் ஆரம்பக் காலத்திலிருந்தே நண்பர்கள். விஜய் அதனால் அவரைப் பயன்படுத்தி இருக்கிறார். அதில் அரசியல் எதுவும் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications