உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பு சொல்லுமா? அடுத்தது என்ன? ஓபிஎஸ் உடன் ஆதரவாளர்கள் பரபர ஆலோசனை
சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் சந்தித்து பேசி வருகின்றனர்.
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு வெகு ஜோராக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தயாராகி வரும் நிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வத்துடன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஒற்றைத்தலைமை விவகாரத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் 90 சதவிகிதம் பேரும் பொதுக்குழு உறுப்பினர்கள் 2450 பேரும் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் உள்ளனர். நாளுக்கு நாள் ஓ.பன்னீர் செல்வத்தின் பலம் படிப்படியாக குறைந்து வருகிறது.
ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த பல நிர்வாகிகள் தற்போது எடப்பாடி அணிக்குத் தாவி ஓபிஎஸ்க்கு எதிராகவே ஆலோசனை நடத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு
தங்கமணி, வேலுமணி ,சிவி சண்முகம், கேபி முனுசாமி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், ராஜன்செல்லப்பா, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, உள்ளிட்ட பல மாவட்ட செயலாளர்களும், இளைஞர் இளம்பெண்கள் பாசறை. எம்ஜிஆர் இளைஞர் அணி. அம்மா பேரவை. தகவல் தொழிநுட்ப பிரிவு உள்ளிட்ட சார்பான நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பொதுக்குழு கூட்டம்
கடந்த 23ஆம் தேதியன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது அதிமுகவில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் 2,300க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கடிதம் அனுப்பினர். அப்போது சுமார் 200 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்துக்கு இருந்தது. பின்னர் நாளடைவில் அது சரியத் தொடங்கியது.

பொதுக்குழு உறுப்பினர்கள்
நேரடியாகவும், மாவட்ட செயலாளர்கள் மூலமாகவும் பல பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு 2450க்கும் மேற்பட்டோர் ஆதரவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு
ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் மட்டுமே இருக்கிறார். அதற்கடுத்ததாக மாவட்ட செயலாளர்கள் என பார்க்கும் போது தேனி சையது கான், திருச்சி மாநகர் மாவட்ட வெல்லமண்டி நடராஜன், கன்னியாகுமரி கிழக்கு அசோகன், தஞ்சாவூர் வடக்கு சுப்பிரமணி, பெரம்பலூர் குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரது ஆதரவு மட்டுமே உள்ளது.

எடப்பாடி அசைன்மென்ட்
ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் ஆகியோரையும் தங்கள் தரப்புக்கு இழுக்க வேண்டும் என்று முக்கிய நிர்வாகி ஒருவருக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாவட்ட செயலாளர்கள் வரவில்லை என்றாலும் அவர்களுக்கு கீழ் இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களை எப்படியாவது பேசி கட்சிக்குள் தனக்கான ஆதரவு வட்டத்தில் இணைக்க வைக்க வேண்டும் என கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி எனவேதான் வரிசையாக பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அடுத்தடுத்து ஆலோசனை
பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பை நிலைகுலைய வைத்துள்ளது. மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட தனது ஆதரவு வழக்கறிஞர் அணியிடம் ஆலோசனை நடத்தி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். அதே நேரத்தில் அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் திருச்சி வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரும் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். ஜூலை 11ஆம் தேதி விடியும் போது தனக்கு ஆதரவான நிலை இருக்குமா என்ற கவலையில் இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications