வெள்ளி தான் அடுத்த தங்கமா.. அதை வாங்கி சேமிக்கலாமா? ஆனந்த் சீனிவாசன் சொன்ன நறுக் பதில்
சென்னை: நமது நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எப்போதுமே தங்கத்தைத் தான் முதலீடாகக் கருதுகிறார்கள். அதேநேரம் தங்கம் விலை இப்போது தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், தங்கத்திற்குப் பதிலாக அடுத்து வெள்ளியைச் சேமிப்பாகக் கருதலாமா.. தங்கம் அளவுக்கு இதுவும் பாதுகாப்பான சேமிப்பாக இருக்குமா என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த 10 நாட்களில் தங்கம் விலை மிகப் பெரியளவில் குறைந்துள்ளது.

நேற்றைய தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.6385க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தங்கம் விலை குறைந்துள்ளதால் பலரும் இப்போது தங்கத்தை வாங்குகிறார்கள்.
தங்கம்: நமது நாட்டை பொறுத்தவரைத் தங்கம் என்பதைத் தான் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் முக்கிய சேமிப்பாகக் கருதுகிறார்கள். இப்போது தங்கம் விலை பலருக்கும் எட்டாத உயரத்திற்குச் சென்றுவிட்ட நிலையில், பலரும் வெள்ளியைச் சேமிக்கலாமா என நினைக்கிறார்கள். தங்கம் விலை எப்படி திடீரென ராக்கெட் வேகத்தில் உயர்ந்ததோ.. அதேபோல வெள்ளி விலையும் உயரும் என நம்புகிறார்கள்.
வெள்ளி: வெள்ளி விலையும் கூட கடந்த 10 நாட்களில் பெரியளவில் குறைந்துள்ளது. கடந்த ஜூன் 21ம் தேதி சென்னையில் ரூ.91,500க்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி, நேற்றைய தினம் ரூ. 84,500ஆகக் குறைந்துள்ளது. இதனால் வெள்ளியை இப்போது வாங்கலாமா என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. இதற்கிடையே இதற்குப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் சமீபத்தில் தனது யூடியூப் சேனலில், "தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைத்ததால்.. தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால் தங்கம் விலை சட்டெனக் குறைந்தது. இதனால் இப்போது தங்கம் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இன்னும் கொஞ்சம் இறக்குமதி வரி இருக்கும் நிலையில், நினைத்தால் அதையும் குறைக்கலாம்.. அப்படிச் செய்தால் தங்கம் விலை மேலும் குறையும். ஆனால், அடுத்தாண்டு வரை அதைச் செய்ய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
தங்கப் பத்திரத்தை வாங்கலாமே எனப் பலரும் சொன்னார்கள். ஆனால், இப்போது இறக்குமதி வரி குறைப்பால் தங்கப் பத்திரத்தை வைத்திருப்போருக்கு இழப்பு.. இதன் காரணமாகவே தங்கத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும் என்கிறேன். எதாவது பெரிய பிரச்சினையாகி ஊரை விட்டே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் இதுபோல தங்கம் கையில் இருந்தால் மட்டுமே உதவும்.
வெள்ளி விலை: தங்கம் விலை இப்படி இருக்கிறது என்றால் மறுபுறம் வெள்ளி விலை மொத்தமாகக் கவிழ்ந்துவிட்டது. இறக்குமதி வரி குறைத்தது சிறு காரணம் என்றாலும் சர்வதேச அளவில் அதன் தேவை குறைந்ததே முக்கிய காரணம். சர்வதேச சந்தையில் 10% வரை குறைந்துள்ளது.
வாய்ப்பே இல்லை: நான் ஏற்கனவே பல முறை சொல்லி இருக்கிறேன்.. தங்கம் வேறு வெள்ளி வேறு.. வெள்ளியைச் சேமிப்பாக வாங்க முடியாது.. வெள்ளி எப்போதும் இதுபோலத் தான் அதிக ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாக இருக்கும். தங்கம் தான் எப்போதுமே சேமிப்பு.. வெள்ளி சேமிப்பு இல்லை.. வெள்ளியால் எப்போதுமே தங்கத்துடன் போட்டிப் போட முடியாது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications