தூக்கத்தில்கூட "துணை முதல்வர்" தரமாட்டார் விஜய்.. தெலுங்குக்காரர்களுக்கெல்லாம் பதவி.. அதிமுகவுக்கு?
சென்னை: 6 எம்எல்ஏக்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும்? அதிமுகவிலிருந்து பலர் தவெகவுக்கு வர வாய்ப்புள்ளதா? அப்படியே வந்தாலும் அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்குமா? பாமகவுக்கு கட்சி துணை முதலமைச்சர் பதவி அல்லது அமைச்சரவைப் பொறுப்புகளை கேட்க வாய்ப்புள்ளதா என்பது பற்றியெல்லாம் மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் சேனல் ஒன்றுக்கு விரிவாக பதிலளித்துள்ளார். அதன் சுருக்கத்தை இங்கே பார்க்கலாம்.
அரசியல் களம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான கோடீஸ்வரன், "6 எம்எல்ஏக்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால், அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் இப்போதைய கேள்வி. இதற்காக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றெல்லாம் சொல்ல முடியாது.

ஆட்சி கவிழுமா?
விஜய் சாருக்கும், ஆதவ் அர்ஜுனாவுக்கும் ஆட்சியைக் கவிழ்க்கிறதிலோ, கலைக்கிறதிலோ விருப்பம் இருக்காது. பிரதமர் மோடிக்கும், கவர்னருக்கும்கூட அதில் ஆர்வம் இருக்காது. அதனால், வெளியில் விஜய் சார் பயத்தில் இருக்கிறார் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.
ஆனால், தீர்ப்பு தவெகவுக்கு சாதகமாக வராவிட்டால், அடுத்து சமாதான பேச்சுவார்த்தைகள்தான் நடக்கும். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என ஒவ்வொருவரிடமும் பேச வேண்டியிருக்கும். பேபியிடம் பேசி, அவர் மூலமாக ராகுல் காந்தியிடம் பேசி.. இப்படித்தான் அரசியல் நகர்வுகள் போகும்.
ஏற்கெனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியைக் கலைக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அப்படியிருக்கும்போது, இந்த விவகாரத்தை வைத்து அரசியல் கணக்குகள் போடுவார்கள். தீர்ப்பு வந்த பிறகுதான் அடுத்தகட்டம் எப்படி இருக்கும் என்பது தெரியும்.
தெலுங்குக்காரர்களுக்கு போஸ்டிங்
அதேபோல அதிமுகவிலிருந்து நிறைய பேர் தவெகவுக்கு வருவார்கள். விஜய் சார் நினைத்தால் அவர்களுக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கலாம். தெலுங்குக்காரர்களுக்கெல்லாம் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி கொடுக்கும்போது, அதிமுகவில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் கொடுக்க மாட்டாரா? கொடுப்பார்.. நிறைய பேருக்கு லம்பாகவே கொடுக்கலாம். ஆனால், எல்லோருக்கும் கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். சிலருக்கு பெரிய பதவி கிடைக்கும்.. சிலருக்கு ஒன்றுமே கிடைக்காமல் போகும்.
இங்கேதான் கட்சிக்குள் பிரச்சனையே வரும். ஆரம்பத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள். இப்போது வெற்றியைப் பார்த்துவிட்டு வருபவர்கள் இன்னொரு பக்கம். யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது? யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது? அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றால், எம்எல்ஏக்கள் முதலமைச்சரைப் போய்ப் பார்ப்பதற்குக்கூட சிரமப்படுவார்கள்.
முதலமைச்சர் அறைக்குள் போய் உட்காருவதற்கே இன்றைக்கு எவ்வளவு போட்டி இருக்கிறது தெரியுமா? எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய அறைக்குள் போவதற்கே பலரும் தயங்குவார்கள். அந்த அளவுக்கு அதிகாரம் மாறும்போது நிலைமையும் மாறும்.
பாமக துணை முதல்வர் பதவி கேட்குமா?
பாமகவுக்கு துணை முதல்வர் பதவியா? தூக்கத்தில் கூட கொடுக்க மாட்டார் விஜய் சார்! 4 சீட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி பதவியைக் கொடுத்துவிடுவார்களா? 4 தொகுதிகளுக்காக இவ்வளவு பெரிய பதவியைக் கேட்பது பேராசைதான். அதுவும் ஆரம்பத்திலேயே ஓடிவந்து ஆதரவு கொடுக்கவில்லை. உட்கார்ந்து, இது கொடுப்பீங்களா, அது கொடுப்பீங்களா என்று கேட்டுவிட்டு, தாமதமாகத்தான் வந்தார்கள்.
காங்கிரஸ் முதலில் வந்து ஆதரவு கொடுத்தது. அப்படி முதலில் வருபவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம். தாமதமாக வருபவர்களுக்கு அதே மதிப்பு கிடைக்காது.
பாமகவுக்கு அமைச்சரவையில் ஓரிரு இடங்கள் கொடுக்கலாம். ஆனால், துணை முதல்வர் பதவி எல்லாம் கிடைக்குமா என்றால் அதற்கு வாய்ப்பில்லை. விசிகவும் வந்து எங்களுக்கும் கொடுங்கள் என்று கேட்கும். நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறோம், இரண்டு அமைச்சர் பதவி கொடுங்கள் என்பார்கள். இப்படியே ஒவ்வொரு கட்சியும் கணக்குப் போட்டால் என்ன செய்வது? அதனால், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை விஜய்தான் முடிவு செய்வார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
