பலருக்கு "வயிறு எரிகிறது"..சின்னவன் என்றே என்னை கூப்பிடலாம்.. உதயநிதி புது உத்தரவு
என்னை சின்னவன் என்றே கூறுங்கள், உங்களுடைய உழைப்பு அனுபவத்தில் சின்னவன் தான் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம்: என்னை சின்னவன் என்றே கூறுங்கள், உங்களுடைய உழைப்பு அனுபவத்தில் சின்னவன் தான், என்னை செல்லமாக சின்னவன் என்றே கூப்பிடலாம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என்னை சின்னவரே என்று கூறினால் பல விமர்சனங்கள் எழுகிறது, பல பேர் வயிற்று எரிச்சல் அடைகிறார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் உதயநிதி படத்துடன் இளைஞரணியினர் போஸ்டர்கள், பேனர்களை அமைக்கின்றனர். அதில் பல்வேறு பட்டப்பெயர்களையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அவரது ஆதரவாளர்கள் "மூன்றாவது கலைஞர்" என்றும் பட்டம் கொடுத்துள்ளனர். அப்படி எல்லாம் அழைக்க வேண்டாம் என்றும், இனி சின்னவர் என்று அழைத்தாலே போதும் என்றும் கூறியிருந்தார் உதயநிதி ஸ்டாலின். இதனையடுத்து பலரும் சின்னவரே என்றுதான் கூப்பிடுகின்றனர். இதற்கு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் பேச்சு
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமான க.சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கலைஞர் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அதிமுக அடிதடி
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இனிமேல் அதிமுகவை நாம் திட்டவோ, விமர்சிக்கவோ அவசியமே இல்லை,கடந்த சில நாட்களகவே அவர்களுக்குள்ளாகவே அவர்களை திட்டிக்கொண்டு கல் எறிந்து கொள்கிறார்கள், ஏனென்றால் அதிமுகவிற்கு வரலாறு கிடையாது.

திமுக வரலாறு
நமது திமுக இயக்கத்திற்கு வரலாறு இருக்கின்றது, அந்த வரலாறுக்கு சாட்சியாக திமுக மூத்த முன்னோடிகளாக நீங்கள் உள்ளீர்கள் என்றார். நீங்கள் இல்லையென்றால் திமுக கிடையாது என்றும் கூறினார்.

சின்னவர் என்றால் வயிறு எரிகிறது
இனிமேல் என்னை சின்னவன் என்றே கூறுங்கள், உங்களுடைய உழைப்பு அனுபவத்தில் சின்னவன் தான், என்னை செல்லமாக சின்னவன் எண்றே கூப்பிடலாம், என்னை சின்னவரே என்று கூறினால் பல விமர்சனங்கள் எழுகிறது, பல பேர் வயிற்று எரிச்சல் அடைகிறார்கள்,ஆகையால் என்னை நீங்கள் சின்னவன் என்றே கூப்பிடலாம் என்றார்.

வழி நடத்துங்கள்
இந்த சின்னவனை மூத்த முன்னோடிகள் எங்களது கைகளை பிடித்து என்னையும்,என்னை போன்ற இளைஞர்களையும் நீங்கள் வழி நடத்திட வேண்டும், நீங்கள் எங்களுக்கு வழி காட்டுங்கள், உங்களது வழிக்காட்டுதலோடு நாங்கள் வழி நடக்கின்றோம் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications