கோவையில் ஹெட்போனில் பாட்டு கேட்டபடி ஸ்கூட்டியில் நடுரோட்டில் ஆட்டம் போட்ட பெண்.. வைரலாகும் வீடியோ
கோவை: கோயம்புத்தூர் மாநகரின் அதிவேகப் போக்குவரத்து நிறைந்து காணப்படும் சிங்காநல்லூர் திருச்சி சாலையில், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு பாட்டைக் கேட்டபடியே இருசக்கர வாகனத்தில் நடனமாடிச் சென்ற இளம்பெண்ணின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகரில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் முக்கியச் சாலைகளில் ஒன்று திருச்சி சாலை. இந்நிலையில் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை பகுதியில் இருந்து ஹோப் காலேஜ் மேம்பாலப் பகுதி வரை இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, தனது இரு காதுகளிலும் ஹெட்போன்களை மாட்டிக் கொண்டு, அதில் ஓடும் பாடலுக்கு ஏற்பக் கைகளைத் தூக்கியும், தலையை ஆட்டியும் பைக் ஓட்டிக்கொண்டே 'டான்ஸ் வைப்' செய்தபடி சென்று உள்ளார்.

சிங்காநல்லூர் - ஹோப் காலேஜ் சாலைப் பகுதி எப்போதும் அரசுப் பேருந்துகள், கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் கார்கள் அதிவேகத்தில் சென்று வரும் முக்கியமான அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியாகும்.
இத்தகைய சூழலில், காதில் ஹெட்போன் அணிந்து இருப்பதால் பின்னால் இருந்து வரும் வாகனங்களின் ஹாரன் சத்தம் கேட்காத அபாயம், வண்டியை ஓட்டும் போது இரு கைகளையும் விட்டு நடனமாடுவதால் எப்போது வேண்டுமானாலும் நிலைதடுமாறி விழும் ஆபத்து எனத் தனது உயிரையும், சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளின் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த இளம்பெண் செய்த இந்தச் சாகசம் சக பயணிகளைப் பதற வைத்தது.
அவருக்குப் பின்னால் காரில் பயணித்த சிலர், இந்த ஆபத்தான பயணத்தைச் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், "ரீல்ஸ் மற்றும் சமூக வலைதள விளம்பரத்திற்காக இதுபோன்று உயிரைப் பணயம் வைத்துச் சாலையில் சாகசம் செய்வது கண்டிக்கத்தக்கது. பின்னாடி வரும் பெரிய வாகனம் மோதினால் யார் பொறுப்பு?" என்று கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே கோவையில் 10 வயது சிறுவன் கார் ஓட்டியது, அதிவேக பைக் சாகசங்கள் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த இளம்பெண்ணின் வாகனப் பதிவெண்ணை வைத்து கோவை மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவையில் கோவை சத்தி ரோடு / நீலாம்பூர் காபி கடை பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவர் கார் ஓட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியது. காரின் உள்ளே இருந்த சிறுவனின் தந்தை, மதுபோதையில் இருந்ததாகவும், தன் மகன் கார் ஓட்டுவதைப் பார்த்து உற்சாகம் அடைந்ததாகவும் சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
