கீழடியில் நந்தி சிலை? யாருடைய வேலை இது? சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எழும் கோரிக்கைகள்!
கோயம்புத்தூர்: தமிழர்களின் அடையாளத்தை உலககுக்கு எடுத்துரைக்கும் வகையில் கை கொடுத்ததுதான் கீழடி அகழ்வாராய்ச்சி. ஆனால், கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் கீழடியில் நந்தி சிலை கிடைத்தது என்று பொய்யை பரப்பும் வகையில் கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் உள்ள புத்தகங்கங்களில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது யாருடைய செயல் என்று எழுத்தாளர்கள் கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.
கோடிக்கணக்கில் செலவு செய்து, சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்ட அறிவுலக நூலகத்தில் இடம் பெற்றிருக்கும் நூல்கள் மட்டமானவையாக இருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

'சிந்தை' தளத்தில் அவர் எழுதிய கட்டுரையில், AI மூலம் பெறப்பட்ட போலி தகவல்களை கொண்டு, போலியான புத்தகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், புத்தக பதிப்பகத்தின் பெயர், எழுத்தாளர்களின் பெயர், ISBN எண் என அனைத்தும் போலியானவை என அவர் கூறியிருக்கிறார். இந்த கட்டுரையில் அவர் அடுக்கியிருக்கும் குற்றச்சாட்டுகளில் மிகவும் முக்கியமானது.. கீழடியில் 'நந்தி' சிலை கிடைத்தது என்பதுதான்.
கீழடி தளம் சுமார் 2600 ஆண்டுகள் பழமையானது. அங்கு வாழ்ந்த மக்களிடத்தில் மதம் என்கிற கான்செப்டே இல்லை. தென்னிந்தியாவில் முதல் முதலில் நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது கி.பி 6-7ம் நூற்றாண்டில்தான். அதாவது கீழடி காலம், நந்தி சிலையை கண்டெடுப்பதற்கு சுமார் 1000 ஆண்டுகாலம் முந்தையது. இப்படி இருக்கும்போது, புத்தகங்களில்.. கீழடியில் நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது என்ற எழுதப்பட்டிருந்தால், அதை வாசிப்பவரின் மனதில் இதுதான் உண்மை என்று இருக்கும்?
மொத்தத்தில் இந்த புத்தக விஷயத்தில் நடந்த முறைகேடு என்பது.. அறிவுதளத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். எனவே இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று எழுத்தாளர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
எழுத்தாளரும், மதுரை எம்பியமான சு.வெங்கடேசன், "பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் வாங்குவதில் நிகழ்ந்துள்ள ஊழலை எழுத்தாளர் பெருமாள் முருகன் இன்று வெளிக்கொண்டுவந்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்.
கட்டிடத்தின் பெயரிலும், கட்டிட வடிவமைப்புக்கான ஒப்புதலின் பெயரிலும், அலமாரிகள் உள்ளிட்ட பொருட்களின் பெயரிலும் நடக்கும் ஊழலைப் போன்றதல்ல புத்தகத்தின் பெயரில் நடக்கும் ஊழல். அது நிலைத்திருந்து நிரந்தரமாக நஞ்சூட்டும் செயலுக்கு ஒப்பானது.
பெருமாள் முருகன் கண்டறிந்து வெளிக்கொண்டு வந்திருக்காவிட்டால், கீழடியின் வரலாறு எனும் நூல் நந்தி சிலை கண்டறியப்பட்ட செய்தியை சொல்லக் காத்துக் கொண்டே இருக்கும். அது வரலாற்றை சொல்வதல்ல, உண்மையான வரலாற்றைக் கொல்வது.
பெரியார் அறிவுலகிற்குள் செல்லும் ஒரு வாசகனின் மனதிற்குள் இந்தச் செயல் எல்லா காலத்திலும் நடந்து கொண்டிருக்கும். அறிவுலகில் நிகழும் திருட்டும் ஊழலும் வெறும் பொருளாதார இழப்பை மட்டும் சார்ந்ததல்ல; மதிப்பிட முடியாத இழப்புகளைக் கொண்டது. இந்த ஊழல் குறித்து முறையான, பொறுப்புணர்வு மிக்க விசாரணை தேவை. போலியான புத்தகங்கள் பெரியார் அறிவுலகத்திலிருந்து உடனே அகற்றப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேட்க தொடங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
