Rain Holiday: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
கோவை: கனமழை காரணமாக, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர். அந்தவகையில், கோவை, நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. கனமழை காரணமாக இன்று சனிக்கிழமை வழக்கம்போல் அனைத்து பள்ளிகளும் விடுமுறை என்றும், சிறப்பு வகுப்புகள் எதுவும் இருந்தால் நடத்தக்கூடாது மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் தீவுப்பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
