எளிதில் கிடைக்காத PETN! 2 வருட ப்ளான்! கோவை கார் வெடிப்பு திட்டமிட்ட தாக்குதல்! வெளியான பகீர் தகவல்!
கோவை : கோவையில் கடந்த 23ல் நடந்த கார் வெடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரித்து வரும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையில் ஜமேஷா முபின் 6 கோயில்களை நோட்டமிட்டது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பிஇடிஎன், நைட்ரோ கிளிசரின் போன்ற அதிக வெடி திறன் கொண்ட பொருட்களை சேகரித்தது எப்படி? என விசாரித்து வருகின்றனர்.
கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் அந்த ஐந்து பேரையும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சல் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அப்சல்கானை நவம்பர் 10ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை சிலிண்டர் வெடிப்பு
தற்போது இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக சிலிண்டர் வெடி விபத்தில் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் உடல் கருகி உயிரிழந்த, நிலையில் அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது அங்கு வெடிபொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக விபத்து நடந்த இடம் உள்ளிட்ட பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திட்டமிட்ட தாக்குதல்
இந்நிலையில் கோவையில் கடந்த 23ல் நடந்த கார் வெடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரித்து வரும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையில் ஜமேஷா முபின் 6 கோயில்களை நோட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட பென்டேரித் ரிட்டால் டெட்ரா நைட்ரேட், நைட்ரோ கிளிசரின் போன்ற அதிக வெடி திறன் கொண்ட பொருட்களை சேகரித்தது எப்படி?. வேறு எங்கும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நைட்ரோ கிளிசரின்
பென்டேரித் ரிட்டால் டெட்ரா நைட்ரேட், நைட்ரோ கிளிசரின் ஆகியவை அதிக வெடி திறன் கொண்டவை என்பதால் சாதாரணமாக யார் கைகளுக்கும் கிடைக்காது. அங்கீகரிக்கப்பட்ட வெடிபொருள் விற்பனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால் ஜமேஷா முபினின் கைகளுக்கு கிடைத்தது எப்படி என கேள்வி எழுந்துள்ளது. தற்போது அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் சில தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

6 இடங்களில் நோட்டம்
தற்போது வெடி விபத்து ஏற்பட்ட கோயில் மட்டுமல்லாது, கோனியம்மன் கோவில் உள்ளிட்ட ஆறு கோயில்களை நோட்டமிட்டதாகவும் மக்கள் கூடும் நேரத்தில் காரை வெடிக்க வைக்க திட்டம் தீட்டிய நிலையில் காவல்துறையினர் பார்த்ததால் உடனடியாக திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக கார் வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது காரில் கிடைத்த பொருட்களில் டெடனேட்டர் வகை வெடி பொருட்கள் இல்லாத நிலையில். ஆனால் அதே நேரத்தில் அதற்கு இணையான சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

பல கோணங்களில் விசாரணை
இந்த வெடிபொருட்களை இரண்டு ஆண்டுகளாக அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் அரை கிலோ ஒரு கிலோ என வாங்கி உள்ளனர். கிடைக்காத பொருட்களை மட்டும் சட்ட விரோதமாக வாங்கியுள்ளதாகவும் கிடைக்காத வேதிப்பொருட்களை ஜமேஷா முபினுக்கு விற்ற வெடி மருந்து விற்பனையாளர்கள் யார்? என விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அவரது வீட்டில் கிடைத்துள்ள ஆவணங்களின்படி அவரது வீட்டிற்கு யார் யார் வந்து சென்றது இந்த திட்டத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications