ஜேபி நட்டா எங்க ஊருக்கு வரக்கூடாது.. “அரசியலுக்காக கலகம் செய்ய முயற்சி”.. கிராம இளைஞர்கள் எதிர்ப்பு!
கோவை : பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று கோவை வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த இருக்கிறார். கோவை அருகே நல்லி செட்டிப்பாளையத்திற்குச் சென்று கட்சி நிர்வாகி வீட்டில் ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜகவினர் தேநீர் அருந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அரசியல் காரணங்களுக்காக அருந்ததியர் மக்களின் வீட்டில் சாப்பிட வருவதாக பாஜக நாடகத்தை நடத்த முயற்சிக்கிறது, அதனால் ஜேபி நட்டா தங்கள் கிராமத்திற்கு வருவதை எதிர்ப்பதாக பெரியார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.
சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் பாஜகவினர் எங்கள் பகுதியில் சகோதரத்துவத்துடன் வசித்து வரும் மக்களிடையே கலகத்தை மூட்ட முயற்சிக்க வேண்டாம் என பெரியார் திராவிடர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

நட்டா தமிழகம் வருகை
2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, இன்று விமானம் மூலம் கோவை வருகிறார் ஜேபி நட்டா. சில நாட்களுக்கு முன் கார் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான உக்கடம் பகுதியில் அமைந்துள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோயிலுக்குச் சென்று ஜேபி நட்டா வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டது.

பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை
பின்னர், நட்சத்திர ஹோட்டலில் பாஜக மாநில நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் ஜேபி நட்டா. தொடர்ந்து மேட்டுப்பாளையம் அருகே பாஜக சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்துகொள்ளவுள்ளார். பின்னர், நல்லிசெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனிக்கு செல்லும் அவர், அப்பகுதியில் உள்ள பாஜக நிர்வாகியின் வீட்டில் தேநீர் அருந்தவுள்ளார்.

நல்லி செட்டிப்பாளையம்
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகையையொட்டி அனைத்து முன்னேற்பாடுகளையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது, மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனையின்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், கோவை, நீலகிரி தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்குவது ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராமத்தினர் எதிர்ப்பு
நல்லி செட்டிப்பாளையம் கிராமத்திற்கு ஜேபி நட்டா செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில், அந்த கிராமத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. கிராமத்தில் குப்பைகளை அகற்றுவது, மின் கம்பங்களில் படர்ந்து இருக்கும் செடி கொடிகளை வெட்டி எறிவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், நல்லி செட்டிபாளையம் கிராமத்திற்கு பாஜக் தேசிய தலைவர் ஜேபி நட்டா வருவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பெரியார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரச்சனையை ஏற்படுத்த முயற்சி?
பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மக்களின் வீடுகளுக்கு வர விரும்பும் பாஜக தேசிய தலைவர் நட்டா தங்கள் பகுதியில் உள்ள யார் வீட்டிற்கு வேண்டுமானாலும் வந்து உணவு அருந்தலாம். ஆனால், கட்சியினர் வீட்டுக்கு வந்து தங்கள் பகுதி மக்களிடையே பிரச்சனையைத் தூண்டுகின்ற வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக்கூடாது. சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் பாஜகவினர் எங்கள் பகுதியில் சகோதரத்துவத்துடன் வசித்து வரும் மக்களிடையே கலகத்தை மூட்டி விட முயற்சிக்க வேண்டாம் என பெரியார் திராவிடர் கழக பொறுப்பாளர் ராமன் தெரிவித்துள்ளார்.

பாஜக நாடகம்
நீலகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அரசியல் காரணங்களுக்காக அருந்ததியர் மக்களின் வீட்டில் சாப்பிட வருவதாக பாஜக நாடகத்தை நடத்த முயற்சிக்கிறது, அதனால் ஜேபி நட்டா தங்கள் கிராமத்திற்கு வரும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால், ஜேபி நட்டாவுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்பதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications