Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தலை சந்திக்க பயம்; வெளியேறிய 58 Ex MPs; ஏகேடிக்கு கெடு? இலங்கையில் என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 58 பேர் வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி அந்நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி அரசியல் களம் சூடுபிடித்து எரியத் தொடங்கி இருக்கிறது. கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மாபெரும் வாக்குகளைப் பெற்று அநுரகுமார திஸாநாயக்க ஆட்சியைக் கைப்பற்றினார். முதன் முறையாக இலங்கையில் ஒரு இடதுசாரி பின்புலம் கொண்ட ஜெவிபி அதிகாரத்திற்கு வந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்கவால் தொடங்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி ஓர் இடதுசாரி அரசியல் கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவளித்திருந்தனர்.

sri lanka anura kumara dissanayake

இந்தக் கூட்டணியில் 28 அரசியல் கட்சிகளும் சில அமைப்புகளும் இணைந்து போட்டியிட்டன. எனவே இலங்கை தேர்தல் களத்தில் அநுரவுக்கு ஆதரவாக ஒரு அலை வீசி வருவதாக நம்பப்படுகிறது. அதற்குப் பயந்து ஏற்கெனவே 58 பேர் சீனியர் எம்பிகள் தங்களின் ஓய்வு அறிவித்துவிட்டார்கள். தேர்தலில் நிற்கப்போவதில்லை கூறிவிட்டனர். ஆகவே புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை வருகின்ற நாடாளுமன்ற வலுப்பெறும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பத்திரிகையாளர் ஒருவர் வேட்பாளராகக் கொழும்பு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை இலங்கை வானொலி அறிவிப்பாளராக இருந்துவந்த ஏஆர்வி லோஷன் தேர்தல் அரசியலுக்குப் புதியவர். இவர் ஏஆர்வி லோஷன் ஸ்போர்ட்ஸ் என்ற யூடியூப் ஒன்றையும் நடத்தி வருகிறார். மனோ கணேசன் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைந்து போட்டியிடுகிறார். ஏன் இந்த முடிவு? ஏகேடி அரசியல் அலையில் இவர் சிக்கித் தவிப்பாரா? அல்லது தப்பித்து வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கை சமூக ஊடகங்களில் அநுர கட்சியை ஆதரித்துப் போட்டியிடுவதுதான் நல்லது. மீண்டும் பிரிவினைவாதம் பேசி அரசியல் செய்யவேண்டாம் என லோஷனை விமர்சிக்கிறார்கள். அந்த எதிர்ப்பு ஏன்? மீண்டும் தமிழர் சிங்களர் பிரிவினை அரசியல் தேவையா? என்பது குறித்து லோஷன் ஒரு விரிவான பேட்டியை அளித்துள்ளார்.

அதன்மூலம் இலங்கை அரசியல் களத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி ஒரு தெளிவை அவர் முன்வைத்துள்ளார். லோஷன் பேசுகையில், “கொழும்புவைப் பொறுத்தவரை எப்போதும் இரண்டு தொகுதிகளில் தமிழர்கள் வெற்றி பெறுவதற்காக வாய்ப்பு எந்தக் காலகட்டத்திலும் இருந்துள்ளது. ஆனால், அதைச் சரியாக மக்கள் பயன்படுத்திக் கொள்வதில்லையா? அல்லது வேட்பாளர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லையா? என்ற கேள்விக்குச் சரியான விடை கிடைக்கவில்லை.

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினராக மனோ கணேசன் கடந்த 20 வருடங்களாகத் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் 1 லட்சத்து 20ஆயிரம் தமிழர்களின் வாக்குகள் உள்ளன. அதில் நிறையப் பேர் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருவதே இல்லை. ஆக, அந்த வாக்காளர்கள் தான் எங்களின் இலக்கு.

அவர்களிடம் நாங்கள் எங்கள் கொள்கையைத் தெளிவாக முன்வைக்கப் போகிறோம். எனக்கு மூன்று மொழிகள் தெரியும். இங்கே உள்ள அபார்ட்மெண்ட் முதல் கூலித் தொழிலாளர்வரை என்னப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும்? மற்றவர்களை ஏன் இதைச் செய்யவில்லை எனக் கேட்பதற்குப் பதிலாக நானே களத்தில் இறங்கி இருக்கிறேன்.

பலரும் ஒரு அரசியல் அலையைக் கண்டு பயந்து போய் உள்ளனர். அந்தநேரத்தில் சில விசயங்களை மக்களுக்கு நாங்கள் புரியவைக்க முயல்வோம். இலங்கையில் இடதுசாரி கட்சியான ஜெவிபி முதல்முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இது பெரிய மாற்றம்தான். ஜெவிபி வெற்றிக்கு முதல் காரணம் கடந்த காலத்தில் அதிகாரத்திலிருந்த பலரும் தங்களை வசதிகளைப் பெருக்கிக் கொண்டார்கள். தங்களின் வாரிசுகளுக்குச் சொத்துகளைச் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால், மக்கள் பிரச்சினையைத் தீர்க்கவே இல்லை. அதை ஜெவிபியும் தேசிய மக்கள் சக்தியும் பயன்படுத்திக் கொண்டது. ஜெவிபியை பார்த்து மக்கள் நீ என்ன செய்தாய் எனக் கேள்வி கேட்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆகவே வெற்றி பெற்றார்கள்.

எங்கள் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மீது அப்படியான புகார்கள் இல்லை. அவர் பதவியிலிருந்திருக்கிறார். ஜெவிபி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. எங்கள் கொழும்பு தொகுதி வேட்பாளரை யார் என்றே எங்கள் மக்களுக்குத் தெரியாது. ஜனநாயக மக்கள் முன்னணி தான் தமிழர்களைப் பொறுத்தவரை இதுவரை உடையாமல் இருக்கும் ஒரு கட்சி. தமிழக முற்போக்குக் கூட்டணி என்பது மலையக மக்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணி அல்ல.

மனோ கணேசன் மீதான விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் தான் அதிகம் இருக்கிறது. கள யதார்த்தம் அது அல்ல. அநுரகுமார தனது பலத்தைக் காட்டி சமூக வலைத்தளங்களில் ஒரு போலியான பிம்பத்தைக் கட்டமைக்கிறார். இதுவரை கொழும்பிலிருந்து 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் வந்துள்ளனர். அநுர வெற்றிக்குப் பிறகு தமிழ், முஸ்லிம் வாதங்களைப் பேசக் கூடாது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. ஆனால், கொழும்பில் தமிழ்ப் பள்ளிக்கூடங்களை நடத்துவது கஷ்டம். தமிழில் கடிதம் எழுதுவது கஷ்டம். எங்களுக்கு இன்னும் உரிமை மறுக்கப்பட்டுதான் உள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமாரா திஸாநயக்கவுக்கு 42.31% வாக்குகள் கிடைத்தன. சஜித் பிரேமதாச 32.76% கிடைத்தது. இவர் இருவருக்கும் இடையேதான் மோதல் இருந்தது. சஜித்திற்கு கிடைத்த அதிகப்படியான வாக்குகள் மனோ கணேசனின் தமிழர் கட்சியிலிருந்தும் தமிழரசு கட்சியிலிருந்தும் முஸ்லிம் கட்சிகளிடம் இருந்துதான் கிடைத்தன. அநுரவுக்கு இந்த வாக்குகள் போகவில்லை எனில் இப்போதும் தமிழர்களின் கட்சிகளின் செல்வாக்கு இருக்கிறதுதானே?

பல மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்றும் 2 வருடங்கள் கழித்து அரசியலுக்கு வருவோம் என்றும் அறிவித்திருக்கிறார்கள். அவர்களின் கணக்கு என்ன? எப்படியும் அநுரவின் அரசியல் அலை 2 வருடங்களில் காணாமல் போய்விடும். அது பொய்யான வாதம். 5 வருடங்கள் அநுர இருப்பார். இப்போது நடப்பது ஜனாதிபதி தேர்தல் இல்லை. நாடாளுமன்றத் தேர்தல். எனவே மக்கள் தங்கள் பகுதி பிரதிநிதிகளைத் தான் தேவு செய்வார்கள். ஆகவே என்னைப் போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிகம்” என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+