தாய்லாந்தில் வீட்டு சிறையில் கோத்தபாய ராஜபக்சே-வேறுவழியே இல்லாமல் ஆக.24-ல் இலங்கை திரும்ப திட்டமா?
கொழும்பு: தாய்லாந்து நாட்டில் கடும் கட்டுப்பாடுகளுடன் தஞ்சமடைந்துள்ள இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே வேறுவழியே இல்லாமல் இலங்கைக்கே வரும் 24-ந் தேதி திரும்ப உள்ளாராம்.
Recommended Video
இலங்கையில் பொருளாதார சீரழிவால் கொந்தளித்த பொதுமக்களின் கிளர்ச்சியால் இலங்கையைவிட்டே தப்பி ஓடினார் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே. இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு முதலில் தப்பிச் சென்றார் கோத்தபாய. ஆனால் அங்கு வசிக்கும் இலங்கை நாட்டவரும், மாலத்தீவு அரசியல் தலைவர்களும் கோத்தபாயவுக்கு அடைக்கலம் தர எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னதாக இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சேவும் மாலத்தீவில்தான் ரகசியமாக தஞ்சமடைந்திருந்தார். இந்திய தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில்தான் கோத்தபாயவும் மகிந்தவும் அடைக்கலமாகி இருந்தனர்.

இதனால் மாலத்தீவை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார் கோத்தபாய. சிங்கப்பூர் அரசும் அவருக்கு குறுகிய காலம் தங்குவதற்கு மட்டுமே அனுமதி கொடுத்தது. அதேநேரத்தில் 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைக்காக, போர்க் குற்றங்களுக்காக கோத்தபாயவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என இங்கிலாந்து எம்.பி.க்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதனால் சிங்கப்பூரிலும் கோத்தபாய ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து வெளியேறி தாய்லாந்துக்கு தப்பி ஓடினார் கோத்தபாய ராஜபக்சே!
இதனால் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு ஓடினார் கோத்தபாய ராஜபக்சே. அவருக்கு அடைக்கலம் கொடுத்த தாய்லாந்து அரசாங்கம், வீட்டை விட்டு வெளியே தலைகாட்டக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது. அதாவது தாய்லாந்தில் வீட்டுச் சிறையில்தான் கோத்தபாய இருக்கிறார். தாய்லாந்தும் கூட குறுகிய கால அடைக்கலம்தான் கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதர் உதயங்க வீரதுங்க நேற்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கோத்தபாய ராஜ்பக்சே திறமையான அரசியல்வாதியாக இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் திறமையான நிர்வாகி. கோத்தபாய ராஜபக்சே தமது தொடக்க காலங்களை வசதியாக மறந்துவிட்டார். இப்போதும் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார். வரும் 24-ந் தேதி இலங்கை வர அவர் திட்டமிட்டுள்ளார். ஒருவேளை இத்தகவல் வெளியான பின்னர் அவர் பயணத்தை மாற்றவும் வாய்ப்பிருக்கிறது என்றார் உதயங்க வீரதுங்க.