லேசாக எழுந்த நேரத்தில் அடித்து அமர்த்திய உக்ரைன் போர்! காய்ச்சல் மாத்திரை கூட இன்றி தவிக்கும் இலங்கை
கொழும்பு: உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வரும் சூழ்நிலையில், இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்தை எட்டியுள்ளது. நாட்டில் எந்த கையிருப்பும் இல்லாததால், மோசமான நிலையில் இருக்கிறது இலங்கை.
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு தொடர்ந்து குறைந்துவருவதால், உள்நாட்டு நெருக்கடி மோசமாகி வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, பால் பவுடர்,மருந்துகள் வாங்குவதற்கு கூட நீண்ட வரிசை நிற்கிறது.
உள்நாட்டு போருக்குப் பின், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த இலங்கை பொருளாதாரம், 2019ல் நடந்த குண்டுவெடிப்புக்கு பிறகு மோசமானது. அதன் பிறகு கொரோனா தாக்கத்தால், இலங்கையின் பொருளாதாரம் படுவீழ்ச்சியடைந்தது. தற்போது உக்ரைன் போரால் அது இன்னும் மோசமாகி இருக்கிறது.

பொருளாதாரம்
இருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த சுற்றுலாத்துறையை மேம்படுத்தி, அதன்மூலம் அந்நிய செலாவனியை அதிகரிக்க முடிவு செய்தனர்.கொரோனா தாக்கம் குறைந்த பிறகு சுற்றுலா கொஞ்சம் வேகம் எடுத்தது. இலங்கைக்கு ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து தான் 25% சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் போர் நடந்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

உக்ரைன்- ரஷ்யா
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் இருந்து இங்கு சுற்றுலாவுக்காக வந்தவர்கள், தற்போது போர் சூழலால் மீண்டும் நாடு திரும்ப முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் கையிருப்பும் தீர்ந்துவிட்டது. அவர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளும் செயலிழந்துவிட்டதால், சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதால், எப்போது நாடு திரும்ப முடியும் என்று இலங்கையில் தவித்து வருகிறார்கள். இந்நிலையில், சுற்றுலா வந்த அவர்களின் விசாவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது இலங்கை அரசு.

சுற்றுலா
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ''இலங்கையில் ஆயிரக்கணக்கான ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் ஊர் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள், அவர்களை இலங்கை அரசு கவனித்துக்கொள்ளும். பல சொகுசு ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்களும் அவர்களுக்கு உதவமுன்வந்துள்ளனர். இலங்கையில் சுற்றுலா முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது'' என்றார். மீண்டு வரலாம் என்ற நிலையில், போர் வந்து எல்லாவற்றையும் மாற்றி விட்டது. போரால்வசதி படைத்தவர்கள்கூட பணமில்லாமல் தவித்தார்கள். இப்போது அவர்களுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என இலங்கை உணவக உரிமையாளர் தெரிவித்தார். மேலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு போர் தடையாக இருக்கிறது. பலர் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

தேயிலை
இலங்கை அதிகம் நம்பி இருப்பது தேயிலை மற்றும் சுற்றுலா. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இலங்கை தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. அதுவும் நன்றாக சென்றது. ஆனால்ல் இந்த போர் சூழலால் அதுவும் தற்போது தடைபட்டுள்ளது. அந்நிலை எப்போது சரியாகி, மீண்டும் ஏற்றுமதியை தொடங்கும் என தெரியவில்லை. இலங்கையின் சுற்றுலா என்பது 5 பில்லியன் டாலர் தொழிலாகும், இதில் சுமார் 3 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர். போர் சூழலில் அந்நிய செலாவனி எதுவும் இலங்கைக்கு கிடக்கவில்லை.

இறக்குமதி
எண்ணெய் இறக்குமதி செய்ய மட்டுமே 500 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. அதனால் உக்ரைன் நாடுகளில் இருந்து எந்த இறக்குமதியும் நடக்கவில்லை. பொருளாதாரம் பாதிப்படைந்ததால், எரிபொருள் பம்புகள் வறண்டு போகின்றன.
வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் கூட இறக்குமதி செய்ய, இறக்குமதியாளர்க பணம் இல்லாமல் இருக்கிறார்கள். இலங்கையில் உயிர் காக்கும் மருந்துகள்ள் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து வருகின்றன. இலங்கையில் பல மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரைகள் கூட இல்லை.

மின்வெட்டு
தற்போது கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. இலங்கையில் நீர்மின் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் தினமும் 7-8 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி மற்றும் டீசல் வாங்க பணம் இல்லாமல் இருக்கிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சார நெருக்கடி இன்னும் மோசமாகும்.

இந்தியா
இலங்கையின் இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, இந்தியா ஏற்கெனவே 2.5 பில்லியன் டாலரை வழங்கியுள்ளது. இதற்கு பிறகும் இந்தியா உதவும் என்று தெரிகிறது. அதேபோல சீனாவும் இலங்கைக்கு அதிக பண உதவியை செய்து வருகிறது. இந்த நிலையை சமாளிக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவசர உதவிகோரி அபுதாபி இளவரசரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பேச்சுவார்த்தைக்காக டெல்லி வருவதாக இருந்தார், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சே
இதுபோன்ற சூழ்நிலையில், இலங்கை அரசுக்கு எதிராக பேசியதற்காக இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்துள்ளார் அதிபர் கோத்தபய ராஜபக்சே. நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவை மோசமான அமெரிக்கர் என்று குறிப்பிட்டுள்ளார், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பிலே. இந்த நாடு இவ்வளவு பெரிய நிதி நெருக்கடிக்கு சென்றதற்கு நீங்கள் தான் காரணம் என பசில் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்.

வீழ்ச்சிக்கு காரணம்
இதுகுறித்து உதய கம்மன்பிலே கூறுகையில், ''பசில் ராஜபக்சே ஓர் அமெரிக்க குடிமகன். அமெரிக்கன் இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கிறார். அழகான தீவை மோசமான வீழ்ச்சிக்கு தள்ளியது யார். இதற்கான உண்மைகளை நான் விரைவில் வெளியிடுவேன். எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. 1997ல் இந்தோனேஷியா எதிர்கொண்ட நிலையை, தற்போது இலங்கை சந்தித்து வருகிறது'' என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications