இலங்கையில் அதிபர் மாளிகை சூறையாடல்.. எம்.பி. மீது சரமாரி தாக்குதல்.. என்ன நடக்கிறது?
கொழும்பு: இலங்கை அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்துள்ள நிலையில், எம்.பி. ரஜிதா சேனரத்னாவை கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Recommended Video
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் திண்டாட்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டம் மற்றும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபட்சே விலகினார்.

இதையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே பதவி விலகக்கோரி கடந்த சில மாதங்களாகவே எதிர்க்கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக இன்று மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்தில் கோத்தபய ராஜபட்சேவின் அதிபர் மாளிகையை முற்றுகையிட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொழும்புவில் குவிந்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பும் செய்யப்பட்டது. இந்த நிலையில் அதிபர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள், காவல்துறை பாதுகாப்பை மீறி அதிபர் மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.

இந்த நிலையில் அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே ஆம்புலன்ஸ் மூலம் தப்பியோடியுள்ளார். அவர் ராணுவ தலைமையகத்தில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத்தொடர்ந்து ராணுவ பாதுகாப்பையும் மீறி அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு, அங்கிருந்த பொருட்களையும் சூறையாடினர். அதேபோல் போலீசாரிடம் இருந்து கலவர தடுப்பு வாகனத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதனால் கொழும்புவில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், இலங்கை எம்.பி. ரஜிதா சேனரத்னாவை கடுமையாக தாக்கினர். அதேபோல் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் போராட்டக்காரர்களில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு சூறையாடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பிரதமர் அலுவலகத்திற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் தீவிரமாக இயங்கி வருகிறது. அதேபோல் போராட்டம் மற்ற மாகாணங்களில் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications