தண்ணீரில் மிதக்கும் கடலூர் மாவட்டம்..எங்கும் வெள்ளக்காடு.. கண்ணீரில் விவசாயிகள்
கடலூர்: கொட்டித்தீர்த்த கனமழையால் கடலூர் மாவட்டம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. விளைநிலங்கள் வெள்ளநீரில் மூழ்கி கடல் போல காட்சியளிக்கின்றன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களாக அநேக மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய தொடர்ந்து நீடித்தது. சுமார் 28 மணி நேரம் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்தது. இதனால் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாச்சலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சிதம்பரம் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 307.9 மி.மீ. மழை பெய்துள்ளது.
பரபர குஜராத் தேர்தல்.. பாஜக அடிமடியிலேயே கை வைத்த ஆம் ஆத்மி.. பக்கா ஸ்கெட்ச் போடும் கெஜ்ரிவால் படை!

வெள்ள நீர்
மாவட்டம் முழுவதும் 3325.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 33.25 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. தொடர் மழை காரணமாக கடலூர் நகர் பகுதியான குண்டு உப்பலவாடி, பாதிரிகுப்பம், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை நீடித்ததால் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி பகுதியில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் சாலை எது என்று தெரியாமல் வாகனங்கள் தத்தளித்து சென்றன.

பெருகிய வெள்ளம்
கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கனமழைக்கு காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 13 கால்நடைகள் இறந்துள்ளன. 23 குடிசை வீடுகள் கனமழைக்கு சேதமாகி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் தண்ணீர் வெளியேற வழியில்லாததால் கவலையில் உள்ளனர்.

மூழ்கிய நெற்பயிர்கள்
விருதாச்சலத்தை அடுத்த கவனை, சித்தேரிக்குப்பம், மாத்தூர், கட்டிய நல்லூர், பழவங்குடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேறக்கூடிய மழை நீர் மாரி ஓடை வழியாக வயலூர் ஏறிக்கு சென்று அதன் பின்னர் மணிமுத்தாறு கலப்பது வழக்கம். ஆனால் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் 30 கிராமங்களில் வடிக்கால் வாய்க்காலாக இருக்கும் மாரி கோடையை தூர்வாராததால், சித்தேரிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் மாரி ஓடையின் அருகாமையில் இருக்கும் சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட குருவை சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் முக்கியமாக தண்ணீரில் மூழ்கியது.

விவசாயிகள் தவிப்பு
நீரில் மூழ்கி பயிர்கள் அழுகுவதால் விவசாயிகள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். குருவை சாகுபடி செய்து 45 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், தற்போது பூ பூக்கின்ற பருவம் தொடங்கியுள்ளதால், கனமழை காரணமாக மாரி ஓடையில், ஏற்பட்ட வெள்ள பெருக்கானது, வெளியே செல்ல முடியாமல், விவசாய நிலத்திற்குள் புகுந்து விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

கண்ணீரில் விவசாயிகள்
பல்வேறு இன்னலுக்கு இடையில், கடனை வாங்கி விவசாயம் செய்தால், அதிகாரிகளின் அலட்சியத்தால், தற்போது தங்களது வாழ்வாதாரம் அழிந்து கொண்டிருப்பதாகவும், மாரி ஓடை செல்கின்ற வழியில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பாலம் கட்டும் பணிக்காக, ஓடை தடுக்கப்பட்டதால், வெள்ளம் வடியாமல், விவசாய நிலத்திற்குள் இடுப்பளவிற்கு தேங்கி நிற்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதே நிலை நீடித்தால் நெற்பயிர்கள், அனைத்தும் தண்ணீரில் அழுகிவிடும் என்பது விவசாயிகளின் வேதனை.விவசாயிகளின் நிலையை வேளாண் துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை எனவும், நீரில் மூழ்கிய நெற்பயிர்களை, நேரில் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கையாகும்.

மிக கனமழை தொடரும்
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை முதல் கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறினார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்கள் தமிழ்நாடு, ஆந்திர கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.