கள்ளக்குறிச்சி மாணவி மர்மமரணம்.. பள்ளி நிர்வாகிகள் உள்பட ஐவரிடம் விசாரிக்க அனுமதிகோரி சிபிசிஐடி மனு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கைதான பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி இறந்தார்.
மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கூறினர். பள்ளி சார்பில் சரியான பதில் அளிக்கவில்லை எனக்கூறி சிறுமியின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியில் வெடித்த கலவரம்
இதற்கிடையே கடந்த 17 ம் தேதி நடந்த போராட்டம் கலவரமானது. சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்தவர்கள் போராட்டத்தை வன்முறையாக மாற்றினார். பள்ளி வாகனம், போலீஸ் வாகனத்தை தீவைத்து எரித்தனர். பள்ளியில் உள்ள பொருட்கள் சூறையாடப்பட்டு சான்றிதழ்களும் தீக்கிரையாகின. இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்ததால் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கைள போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேர் கைது
முன்னதாக மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை போலீசார் அடுத்தடுத்து கைது செயத்னர். இதையடுத்து அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 5 பேரும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல்
இந்நிலையில் தான் மாணவியின் மர்மமரணம் மற்றும் கலவரம் தொடர்பான விசாரணை சூடுபிடித்துள்ளது. இதன் ஒருபகுதியாக கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகளிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்ககோரி சிபிசிஐபடி போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
Recommended Video

தீவிரமாகும் நடவடிக்கை
மேலும் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த கைது நடவடிக்கையானது சமூக வலைதள பதிவு மற்றும் போலீசாரின் வீடியோ பதிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக டுவிட்டரில் வதந்தி பரப்பிய நபர்களை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் கலவரம் தொடர்பாக டுவிட்டரில் வதந்தி பரப்பியவர்களின் விபரங்களை வழங்கும்படி கள்ளக்குறிச்சி போலீசார் டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications