தமிழகத்தில் டோல்கேட் கட்டணம் திடீர் உயர்வு! செப்.,1 முதல் செங்குறிச்சி, திருமாந்துறையில் அமல்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உளுந்தூர் பேட்டையை அடுத்த செங்குறிச்சி மற்றும் திருமாந்துறை டோல்கேட்டில் வாகனங்களுக்கான கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு என்பது செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
Recommended Video
இந்தியாவில் டோல்கேட் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைகளில் டோல்கேட் வைத்து வாகன ஓட்டிகளில் கட்டண கொள்ளை செய்வதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
சமீபத்திய நாடாளுமன்ற கூட்டத்தில் கூட நாடு முழுவதும் உள்ள டோல்கேட்டுகளை அகற்றிவிட்டு வாகனங்களை பதிவு செய்யும்போதே ஒருமுறை கட்டணம் வசூலிக்க வே்டும் என திமுக எம்பி வில்சன் ராஜ்யசபாவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

49 இடங்களில் சுங்கச்சாவடிகள்
தமிழகத்தை பொறுத்தவரை 6,606 கிலோமீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ., சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், மீதமுள்ள 1,472 கி.மீ., சாலைகளை மத்திய அரசின் நிதியில் மாநில நெடுஞ்சாலை துறையும் பராமரித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் டோல்கேட்டுகள் இயங்கி வருகின்றன.

கட்டணம் உயர்வு
இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை முதல் பாடாலூர் வரையிலான நெடுஞ்சாலையில் உள்ள செங்குறிச்சி மற்றும் திருமாந்துறையில் உள்ள டோல்கேட்டுகளில் வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை திருச்சி டோல்வே பிரைவேட் லிமிட்டெட் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

கார்-வேன்-இலகுரக வாகனங்கள்
அதன்படி ஏற்கனவே கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு முறை செல்வதற்கான கட்டணம் ரூ.55ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.65 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதே போல் பலமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.85 ஆக இருந்த நிலையில் ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்வதற்கான கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.115 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, பலமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.150ல் இருந்து ரூ.170 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

டிராக், பஸ்களுக்கு எவ்வளவு?
மேலும் டிராக், பஸ்களுக்கு ஒருமுறை செல்ல ரூ.200 ஆக இருந்த கட்டணம் ரூ.230ஆகவும், பலமுறை செல்வதற்கான கட்டணம் ரூ.300ல் இருந்து ரூ.345 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு பல அச்சுகள் கொண்ட வாகனங்கள் ஒரு முறை செல்வதற்கான கட்டணம் ரூ.320ல் இருந்து ரூ.370ஆகவும், பலமுறை செல்வதற்கான கட்டணம் ரூ.480ல் இருந்து ரூ.550ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சுமை
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வரும் சூழலில் தான் இந்த டோல்கேட் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. இதனால் அந்த டோல்கேட்டுகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சுமை ஏற்படும். இதனால் டோல்கேட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்க துவங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications