பஞ்சாபில் பரபரப்பு.. ஒரே விமானத்தில் வந்த 150 பேருக்கு கொரோனா.. எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பும் நபர்களிடையே கொரோனா உறுதி செய்யப்படும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஓமிக்ரான் பரவலுக்குப் பின்னர் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் உலக நாடுகள் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
அதன்படி இந்தியாவிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆபத்தான நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருவோருக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆபத்தான நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று, வெள்ளிக்கிழமை இத்தாலியின் ரோம் நகரில் இருந்து அமிர்தசரஸ் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த விமானத்தில் மொத்தம் 290 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வியாழக்கிழமை, இத்தாலியின் மிலனில் இருந்து அமிர்தசரஸ் வந்த சார்ட்டர் விமானத்தில் 125 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications